பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே தைமூர் எனும் ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாகவும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு தாயும் சேயும் நலமாக உள்ளனர் என போட்டோ போட்டு தனது சந்தோஷத்தை நடிகர் சைஃப் அலி கான் வெளிப்படுத்தி உள்ளார்.

கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் இரண்டாவது முறையாக கருவுற்ற நடிகை கரீனா கபூர் தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பாலிவுட் ரசிகர்கள் இந்த சந்தோஷ தருணத்தை கொண்டாடி வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூருக்கு தற்போது 40 வயதாகிறது. கடந்த 2012ம் ஆண்டு நடிகர் சைஃப் அலி கான் கரீனா கபூரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார்.  

சைஃப் அலி கான் கடந்த 1991ம் ஆண்டு அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரபல இளம் நடிகையாக வலம் வரும் சாரா அலி கான், சைஃப் மற்றும் அம்ரிதா சிங்குக்கு பிறந்தவர். சாராவை தொடர்ந்து இப்ரஹிம் என்கிற மகனும் உள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்களின் குடும்பத்தில் புதிதாக ஒரு உறுப்பினர் வரப் போகிறார் என கரீனா அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்ட கரீனாவை மருத்துவமனையில் சைஃப் அலி கான் கொண்டு சேர்த்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கர்ப்ப காலத்தில் தனக்கு நேர்ந்த அனைத்து விஷயங்களையும் தொகுத்து பிரெக்னன்ஸி பைபிள் எனும் பெயரில் ஒரு புத்தகத்தை நடிகை கரீனா கபூர் எழுதியுள்ளார். கூடிய விரைவில் அந்த புத்தகத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் கரீனா கபூர். சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா எழுதிய அன்ஃபினிஷ்ட் புத்தகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சாரா அலி கான், இப்ரஹிமுக்கு போட்டியாக தைமூர் இருந்து வந்த நிலையில், தற்போது தைமூருக்கு போட்டியாக இன்னொரு குட்டிப் பையன் பிறந்துள்ளான் என பாலிவுட் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நெப்போடிசம் சர்ச்சைகள் பாலிவுட்டில் தலை விரித்தாடும் சூழலில் அடுத்த வாரிசு ரெடி என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் இலங்கை அரசன் ராவணனாக நடிகர் சைஃப் அலி கான் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான தாண்டவ் வெப்சீரிஸில் இந்து கடவுள்களை அவமதித்ததாக மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.