பாலிவுட் திரைப்பட உலகில் பிரபலமானவர் நடிகை அமீஷா படேல். இவர் இந்தியில், ரேஸ் 2, ஷார்ட்கட் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் தளபதி விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்திருந்தார். தற்போது பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு, லோக் ஜன சக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திரா என்பவருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பீகார் மாநிலத்தின் தௌத்நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மும்பை திரும்பியுள்ளார் அமீஷா பட்டேல். பீகாரில் நடந்தது பற்றி அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது, பிரச்சாரம் செய்யும்போது பயமாக இருந்தது. என்னை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்றுவிடுவார்களோ என்று பயந்தேன். என் உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டியதாகிவிட்டது.

பிரகாஷ் சந்திரா என்னை மிரட்டியதுடன், பிரச்சாரத்தின்போது என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் மும்பைக்கு வந்த பிறகும் கூட அவர் என்னை மிரட்டுகிறார். எனக்கு போன் செய்து மிரட்டியதுடன், தன்னை பற்றி பெருமையாக பேசுமாறு மெசேஜும் அனுப்பியிருந்தார்.

பீகாரில் எனக்கு நடந்தது குறித்து நான் வெளிப்படையாக பேசுவதால் அப்படி மிரட்டுகிறார். பிரகாஷ் சந்திராவால் நான் குறித்த நேரத்தில் விமான நிலையத்திற்கு வர முடியாமல் விமானத்தை மிஸ் செய்தேன். அவர் என்னை ஒரு கிராமத்தில் தங்க வைத்தார். அவர் சொல்வதுபடி எல்லாம் நடக்காவிட்டால் என்னை அந்த கிராமத்தில் விட்டுவிட்டு செல்வதாக மிரட்டினார் என்றார்.

அமீஷா பட்டேலின் காரை சுற்றி தன் ஆட்களை எப்பொழுதும் நிறுத்தி வைத்தாராம் பிரகாஷ் சந்திரா. பிரச்சாரத்திற்கு சென்று விட்டு மும்பைக்கு திரும்பி வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது என்று அமீஷா பட்டேல் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமீஷா கைவசம் தேசி மேஜிக் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.