உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் என்ற அடையாளம் இருந்தாலும், தனது நடிப்பால் மக்களின் மனதில் இடம்பெற்றவர் அக்ஷரா ஹாசன்.  பால்கி இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான ஷமிதாப் என்ற படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார். முதல் படத்திலே அமிதாப் பச்சன், தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து அசத்தினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த விவேகம் படம் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி தந்தார் அக்ஷரா.

கடந்த ஆண்டு ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார் அக்ஷரா. இந்நிலையில் அக்ஷராவின் மேக்கப் கலைஞரான சச்சினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சச்சின் தாதா மரணத்தால் அக்ஷரா சோகத்தில் ஆழ்ந்துள்ளார். சச்சினின் இழப்பு திரை பிரபலங்களை பாதித்துள்ளது. 

இது குறித்து அக்ஷ்ரா தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், இந்த கொரோனா சூழலில் நாம் பல அழகிய உயிர்களை இழந்தது என் இதயத்தை கனக்க வைக்கிறது. ஷமிதாப் படத்தில் நடித்ததில் இருந்து எனக்கு மேக்கப் கலைஞராக இருந்த என் சகோதரர் சச்சின் தாதா கோவிட் பாதிப்பால் இறந்துவிட்டார். 

அதனால் இந்த போஸ்ட்டை மிகவும் கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். அவர் ரொம்பவும் சந்தோஷமான, பாசிட்டிவான மனிதர், மிகவும் திறமையானவர். அதை எல்லாம் தாண்டி அவர் எனக்கு நல்ல நண்பர். இரண்டு மகன்களுக்கு நல்ல அப்பா, மனைவிக்கு அருமையான கணவர். அவரின் குடும்பத்தார் ஆரோக்கியமாக இருக்கட்டும். தாதா எங்கிருந்தாலும் நிம்மதியாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

அக்ஷரா அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்த இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மூடர் கூடம் புகழ் நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். சீனுவாக விஜய் ஆண்டனி, விஜியாக அக்ஷரா ஹாசனும், ரஞ்சித் எனும் பாத்திரத்தில் அருண் விஜய்யும் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு மீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.

தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.