தமிழ் திரையுலகில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். திரைத்துறை மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். ஆளில்லா ட்ரோன் விமானங்களை இயக்குவதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம். அதனால் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் ஆலோசகராகவும் பதவி வகித்தார். 

இவர் தலைமையில் இயங்கிய தக்ஷா குழு ஆளில்லா குட்டி விமானம் ஒன்றை வடிவமைத்திருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கூட தக்‌ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன் பெரும் பாராட்டுக்களை பெற்றது. 

இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் தங்களது உயிரையும் பணயம் வைத்து இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க போதுமான ஊழியர்கள் இல்லாத நிலை நீடித்து வந்தது. அதற்கு மாற்றாக களமிறங்கியது தக்ஷா குழு. ட்ரோன் மூலம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது. 

இதுகுறித்து NDTV தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டாக்டர் கார்த்திக் நாராயணன், தக்ஷாவைப் பொறுத்தவரை, அஜித் குமாரால் வழிநடத்தப்பட்ட ஒரு முயற்சியாகும், மேலும் அனைத்து சிவப்பு மண்டல பகுதிகளிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் ட்ரோன்களைப் பயன்படுத்தி கிருமிநாசினிகளை தெளிக்கும் ஒரு புதுமையான யோசனையை அவர் கொண்டு வந்துள்ளார். இது சென்னையில் நடத்தப்பட்டது, அது வெற்றிகரமாக மாறியது. அதே யோசனை தற்போது திருநெல்வேலியில் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டது, அதே ட்ரோன்கள் கிருமிநாசினியை தெளிப்பதற்கான தீர்வாகும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். 

லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் H.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்கவுள்ளார். போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இளம் தலைமுறையை பயனுள்ள விஷயத்தில் ஈடுபட வைக்கும் அஜித்தின் இந்த செயலை பலரும் பாராட்டிவருகின்றனர்.