கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, டெல்லியில் பிரதமர் மோடியும் - சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியும் தனித்தனியாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் 5 வது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. எனினும் 5 வது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டபோது, பல்வேறு பணிகளுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால், சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

Lockdown extension once again PM Modi TN CM Edappadi Palaniswami discussion

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது, மத்திய அமைச்சரவை முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது.

இதில், வரும் 30 ஆம் தேதியுடன் நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய  பொது முடக்கம் முடியும் நிலையில் இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும்,  சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  

அதேபோல், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Lockdown extension once again PM Modi TN CM Edappadi Palaniswami discussion

இதில், சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு பற்றி முக்கியமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், மாவட்டங்களில் தோறும் கொரோனா தடுப்பு பணியைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

குறிப்பாகத் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் திடீரென அதிகரிக்கும் பாதிப்பு குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன் திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதும் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, மதுரையைத் தொடர்ந்து தேனியில் இன்று மாலை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் செய்திகள் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.