கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு அறிமுகமானவர் நடிகை கனிகா. தொடர்ந்து எதிரி, வரலாறு, ஆட்டோகிராப், டான்ஸர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வரலாறு படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தல அஜித்திற்கு ஜோடியாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட தாயாகவும் தனது நடிப்பில் அசத்தியிருப்பார் கனிகா. கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் கெளரவ பாத்திரத்தில் நடித்திருந்தார். 

தமிழில் குறைந்த படங்களில் மட்டும் நடித்தாலும், மலையாளத்தில் ஏராளமான வெற்றிப்படங்களை தந்துள்ளார் கனிகா. ஷியாம் ராதா கிருஷ்ணன் என்பவரை 2008-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் கனிகா. கனிகாவுக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். இந்த லாக்டவுனில் படப்பிடிப்பு இல்லாததால் தனது மகனுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். 

தற்போது தனது மகனுடன் நடனமாடி அசத்தியுள்ளார் கனிகா. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவான தில் பேச்சரா திரைப்படத்தின் பாடலுக்கு அம்மாவும் மகனும் நடனமாடியுள்ளனர். அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் ஒரு நல்ல நடிகை மட்டுமல்ல நல்ல தாயும்தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என பாராட்டி வருகின்றனர். 

நீண்ட இடைவெளிக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் கனிகா. விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். மோகன் ராஜா, ரித்விகா, விவேக், சின்னி ஜெயந்த் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்தது. கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் நடிகர்கள் மற்றும் சினிமா சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ளனர். 

அரசு உத்தரவு படி சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் படங்களின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் சமீபத்தில் துவங்கி நிறைவு பெற்றது. படத்தின் டப்பிங் பணிகளை கடந்த மாதம் முடித்தார் நடிகை கனிகா. இந்த படத்திற்காக இலங்கை தமிழ் கற்றுக்கொண்டது வேடிக்கையாக இருந்தது என இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.