உலகளவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. நிபுணர்கள் அமெரிக்கா இன்னும் மோசமாகப் பாதிப்படையும் என எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் மற்றும் இந்தியா உள்ளன. இந்த நாடுகளும் கடுமையாகப் பாதிப்படைந்து வருகின்றன. 

கோவிட் - 19 கொரோனா வைரஸின் பாதிப்பு, ஒவ்வொரு நாளும் அதிகரிப்பதை காணும்போது அனைவருக்கும் கூடவே ஒருவித பயம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. இன்றைய தேதிக்கு, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 50,000 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் பதிவாகி வருகின்றனர். இந்தியாவில் என்றில்லை, உலகம் முழுக்கவே மோசமான நிலையே நிலவிவருகின்றது.

அதில் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, தினமும் மிகவும் மோசமாகிக் கொண்டே போகின்றது. இதுவரை ஒன்றரை லட்சம் உயிர்களை இழந்துவிட்டது அமெரிக்கா. இன்னும் 20 நாள்களில், மேற்கொண்டு 20,000 பேர் கொரோனா காரணமாக அமெரிக்காவில் உயிரிழப்பர் என கணித்துள்ளது அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்றால் 18.55 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவில் வைரஸ் பரவுவது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, ``கொரோனா வைரஸ் பிரச்னைகளைக் கையாள்வதில் அமெரிக்கா மற்ற பெரிய நாடுகளைவிட சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் சீனாவைத் தவிர்த்து அமெரிக்காவும் மிகப்பெரிய நாடு என்பதை மறந்துவிட வேண்டாம். சீனாவில் வைரஸ் இப்போது அதிக பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இந்தியாவில் வைரஸ் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இவற்றைத் தவிர்த்து மற்ற நாடுகளிலும் பிரச்னைகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுமார் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ``நாங்கள் 60 மில்லியன் மக்களுக்கு பரிசோதனை செய்துள்ளோம். அதில் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் விரைவாக பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டுள்ளன. நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறோம் என்றே நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த வாரங்களைவிட குறையத் தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்ட அதிபர் ட்ரம்ப், ``அமெரிக்காவில் ஹாட்ஸ்பாட்டுகளாக இருந்த சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த வாரங்களைவிட குறைந்துள்ளது. அரிசோனா மாகாணத்தில் வாரத்தின் அடிப்படையில் பாதிப்பு எண்ணிக்கை 37% குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி மிகப்பெரியது. மாகாணத்தின் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அதேபோல டெக்ஸாஸில் 18.7% பாதிப்பு குறைந்துள்ளது. புளோரிடாவில் 21.2% பாதிப்பு குறைந்துள்ளது. ஜார்ஜியா, மிஸ்ஸிஸிப்பி, டென்னஸ்ஸி மற்றும் ஓக்லஹோமா போன்ற மாகாணங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தப் பகுதிகளில் அதிகம் கட்டுப்பாடுகள் தேவை” என்று கூறியுள்ளார்.

அனைத்து அமெரிக்கர்களும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும் என்றும் கூட்டமான பகுதிகளைத் தவிர்க்க முடியாத நிலையில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். வயதானவர்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார். ``உலகின் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னைகள் தொடர்பாகப் பலரும் மிகப்பெரிய வேலைகளைச் செய்து வருகிறார்கள். ஆனால், கொரோனா வைரஸ் மிகவும் கடினமான கண்ணுக்குத் தெரியாத எதிரி. ஊரடங்கு போன்ற விஷயங்கள் வைரஸ் பரவலை எதிர்காலத்தில் தடுக்காது. வைரஸ் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று ஊரடங்கு குறித்த தனது கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், ``தடுப்பூசிகள் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம். உயிரிழப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம். தற்போதைய நிலைமையில், ஆரோக்கியமான இளம் அமெரிக்கர்களைப் பாதுகாப்புடன் வேலை செய்ய அனுமதிப்பதிலும் பள்ளிகளை மீண்டும் திறக்கும்போது பாதிப்பு ஏற்படாமல் அவர்களைப் பாதுகாப்பதிலும் எங்களது கவனத்தை செலுத்தி வருகிறோம். நாங்கள் பள்ளிகளைத் திறக்கவே விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்

பள்ளிகள் திறப்பு குறித்து முன்னதாகவே ட்ரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர் முன்னதாக பேசியிருந்தபோது, உலக சுகாதார நிறுவனமேவும் தலையிட்டு, `பள்ளிகள் திறப்பது, ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே இப்போதைக்கு பள்ளிகளை திறக்க வேண்டாம்' எனக் குறிப்பிட்டது. இப்போது ட்ரம்ப் இப்படி கூறியிருப்பது, மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இன்னொரு பக்கம், ட்ரம்ப்பின் இந்தியா மீதான இந்த விமர்சனம், அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக ட்ரம்பின் இந்த விமர்சனத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி பதலளிப்பாரா என்பது சமூக வலைதளங்களில் மிகுந்த எதிர்ப்பார்ப்பாக மாறியுள்ளது.