கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவல் இருக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் ரசிகர்களுக்காக மாஸ்டர் படத்தை பத்திரமாக திரையில் கொண்டு வந்து சேர்த்தவர்களுக்கு நன்றியை கூறி இந்த விமர்சனத்தை துவங்குகிறோம். வெள்ளைக்காரன் பிடியில் இருந்து சுதந்திரம் வாங்கிய இந்தியர்கள் போல் கொண்டாட்டத்துடன் காணப்பட்டது திரையரங்கங்கள். முதல் நாள் முதல் காட்சி.. மாஸ்டர் படத்தின் சென்சார் கார்ட் வந்தவுடன், சினிமாவே இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்ற மகிழ்ச்சியில் லோகேஷ் கனகராஜின் விருந்துக்கு தயாரானோம். 

பற்றியெரியம் நெருப்பின் நடுவே பதுங்கியிருக்கும் பவானி, காலப்போக்கில் கட்டுக்கடங்காத அரக்கனாக உருவெடுக்கிறான். அங்கிருந்து நகர்கிறது மாஸ்டர் கதை. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கும் சிறுவர்களை வைத்து போதைப் பொருள் கடத்தல், கொலை என ஆட்சி செய்யும் பவானி தனது அரசியல் வருங்காலத்தை நோக்கி பயணிக்கிறான். இது ஒருபுறமிருக்க...மறுபுறம் கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்பட்ட JD எனும் பேராசிரியர், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவர்களுக்கு பாடம் கற்பிக்க வருகிறார். முதலில் ஜாலியாக இருந்தாலும், அதன் பின் அங்கு நடக்கும் சம்பவங்களை உணர்ந்து வில்லன்களுக்கு பாடம் கற்றுத்தருவதே இந்த மாஸ்டர் படத்தின் கதைக்கரு. 

கல்லூரியில் மாணவர்களின் செல்வாக்கு நிறைந்த பேராசியராக முதல் பாதியில் வருகிறார் தளபதி விஜய். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக, கையில் பூனையுடன், பார்ப்போர்களிடம் திரைப்பட கதைகளை கூறும் ஜாலியான JD சாராக கச்சிதம் காண்பித்துள்ளார். தவறுகளை உணர்ந்து பொறுப்புகளுடன் இரண்டாம் பாதியில் வேறு ஒரு அவதாரம் எடுக்கிறார் நம் தளபதி. வாத்தி கம்மிங்கில் விஜய்யின் நடனம் பலருக்கும் எனர்ஜி பூஸ்டர். அங்கங்கே நமக்கு பிடித்த தளபதி விஜய்யை கொண்டு வந்துள்ளார் லோகேஷ். உதாரணத்திற்கு தூங்கியபடி விஜய் இருந்த காட்சி, துள்ளாத மனமும் துள்ளும் படத்தை நினைவுபடுத்தியது. இரண்டாம் பாதியில் ஆன்ஸு...பூன்ஸூ என கில்லி திரைப்பட சரவண வேலு பாத்திரத்தை நினைவுபடுத்தியது அரங்கத்தை அதிரவைத்தது.  

எந்த ஒரு பாத்திரமாக இருந்தாலும் அதில் எதார்த்தத்தை வெளிப்படுத்தி மக்களை ஈர்ப்பதே மக்கள் செல்வனின் வேலை. பவானி எனும் அரக்க குணம் நிறைந்த ஒருவன் எப்படி பேசுவான், எப்படி பழகுவான், யாரை நம்புவான், எப்போது மூளைக்கு வேலை தருவான், எப்படி பழிதீர்ப்பான் என்பதை பார்த்து பார்த்து செய்துள்ளார் விஜய் சேதுபதி. எல்லா சாமியையும் கும்பிட்டு வைப்போம்..ஆபத்துனா ஏதாவது ஒன்னு வந்து காப்பாத்தும்ல...என விஜய் சேதுபதி பேசும் வசனம் பலே. அடித்து விட்டு ரத்தக்கரையை சட்டையில் துடைப்பது என மிரட்டியுள்ளார் சேது. 

படத்தின் நிறை அதிகமாக இருந்தாலும், ஆங்காங்கே குறைகளும் உள்ளது. மாஸ் எலிமெண்ட்ஸ் அதிகமாக இருந்தாலும், சில இடங்களில் ஓவர் டோஸ் ஆகி விடுகிறது. ஒரு சண்டை காட்சியின் போது ஆண்ட்ரியா மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து வில்-அம்பு விடும் காட்சி ஓவராக இருந்தது. ஓடும் காரில் இருந்து அம்பு சரியாக லாரியின் டயரை சேதப்படுத்துவது ஸ்டண்ட்டுடன் ஒட்டாமல் ஓவர் டோஸ் ஆகி விடுகிறது. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வரும் சின்ன சின்ன சண்டை காட்சிகள் படத்திற்கு வலு சேர்கிறது. இரண்டாம் பாதியில் வரும் எமோஷன் காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாமோ என்று யோசிக்க தோணுகிறது. 

சிறிது நேரம் கதையுடன் ட்ராவல் செய்தாலும் கலக்கியுள்ளார் நாயகி மாளவிகா மோஹனன். ஆண்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு, ஸ்ரீமன், பிரேம், ரம்யா, தீனா போன்ற ஸ்டார் காஸ்ட் அதிகம் இருந்தாலும், படத்தில் அவர்களது பங்கு குறைவே. கிடைக்கும் கேப்பில் ஸ்கோர் செய்து அசத்தியுள்ள பாடகர் பூவையார். லோகேஷ் கனகராஜின் படம் என்றாலே, அதில் ஒரு பேக்கேஜ் இருக்கும். ஸ்கிரிப்ட்டின் ஆழம் தாக்கத்தை ஏற்படுத்தும். மாஸ்டர் படத்தில் அது போன்ற விஷயங்கள் சற்று குறைவாகவே உள்ளது. 

மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய முதுகெலும்பாக அனிருத்தின் இசை அமைந்தது. பாடல்கள், பின்னணி என பின்னி பெடெலெடுத்துகிறார். ஒளிப்பதிவு, எடிட்டிங் என தொழில்நுட்ப பணிகள் படத்திற்கு ஏற்றார் போல் இருந்தது. சிறு வயது பவானியாக நடித்த மாஸ்டர் மகேந்திரனுக்கு தனி சல்யூட். விஜய் சேதுபதியின் Mannerism-களை சரியாக செய்து மனதில் நிற்கிறார். மண்ணை விட்டு மறைந்தாலும், ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார் மறைந்த நடிகர் அருண் அலெக்சாண்டர். கைதி, மாநகரம் போன்ற படங்கள் அளவில் அவருக்கு பெரிய வகையில் ரோல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கல்லூரி மாணவர்கள் அரசியல் பேச வேண்டும், பேனர் கலாச்சாரம், சாதி மதம் ஒழிப்பு என டயலாக் டிபார்ட்மென்ட்டில் அசத்தியிருக்கிறார் லோகேஷ். யாருமே எதிர்பாராத விதத்தில் கிளைமாக்ஸில் லோகேஷ் கனகராஜ் தோன்றியது சற்று சர்ப்ரைஸ் தான். லோகேஷ் ஏற்கனவே கூறியது போல் 50 % தளபதிக்காக எடுக்கப்பட்ட படமாக இருக்கும், 50 % லோகேஷ் கனகராஜின் ஸ்கிரிப்ட் பாணி இடம்பெற்றிருக்கும். மொத்தத்தில் தட்டி கேட்கவும், தவறு செய்வோர்களை திருத்தவும் வந்த மாஸ்டரே இந்த மாஸ்டர்.