டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் பளுத்தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ள நிலையில், இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நேற்று மாலை கோலாகலமாகத் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த
ஒலிம்பிக் போட்டியில், 205 நாடுகளில் இருந்து 11,300 பேர் கலந்து கொண்டு உள்ளனர். 

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில், ஒட்டு மொத்தமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள்
இடம் பெற்று உள்ளனர்.

அத்துடன், இந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே, சர்ஃபிங், ஸ்கேட்போர்டிங், பேஸ்பால், சாஃப்ட்பால், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 5 விளையாட்டுகள் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது.

ஹாக்கி, துப்பாக்கிச் சுடுதல், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், வில்வித்தை உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் தற்போது அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது

அதன் படி, தற்போது நடைபெற்ற மகளிர் பளுதூக்குதலில் 49 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளி பதிக்கபம் வென்று சாதனை
புரிந்துள்ளார். 

அப்போது, சீனாவின் ஹூ ஷிஹு 94 கிலோ எடை தூக்கி தங்கம் பதக்கம் வென்றார். இது ஒலிம்பிக் வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படுகிறது. 87 கிலோ எடைத்
தூக்கி மீராபாய் சானு, தன் சொந்த சாதனையையே சமன் செய்தார். 

இவர், கடந்த 2017 ஆம் ஆண்டின் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற போது இதே 87 கிலோ தான் தூக்கியிருந்தார். 

மேலும், ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இது வரை 2 பதக்கங்களை வென்று உள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், மீராபாய் தற்போது வெள்ளி வென்று அசத்தி உள்ளார். 

பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தற்போது, இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்த மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானுவுக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அதே போல், ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதி போட்டியில் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் அணி தென்கொரியாவிடம் தோல்வியை தழுவி உள்ளது.

அதே போல், 10 மீட்ர் ஏர் பிஸ்டல் போட்டியின் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார் 19 வயதுசவுரப் சவுத்ரி. இறுதிப் போட்டிக்கு 95, 98, 98, 100, 98 மற்றும் 97 மதிப்பெண்களுடன் அவர் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்துள்ளார்.