ஆஸ்திரேலிய அதிரடி கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லை அந்நாட்டைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காதல் திருமணம் செய்ய உள்ள நிலையில், “காதலன் மேக்ஸ்வெல்லை கழற்றி விட்டு இந்தியரை திருமணம் செய்யுங்கள்” என்று, ரசிகர் ஒருவரின் பதிவுக்கு, காதலி வினி ராமன் சரியான பதிலடி கொடுத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்னில் பிறந்து, அங்கேயே வளர்ந்து வரும் இளம் பெண் வினி ராமன், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். வினி ராமன் தந்தை அந்நாட்டில் குடிபெயர்ந்ததைத் தொடர்ந்து, வினி ராமன் ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து வளர்ந்து வருகிறார்.

இதனிடையே, ஆஸ்திரேலிய நாட்டின் அதிரடி கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லும், இளம் பெண் வினி ராமனும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். 

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் உடன், இளம் பெண் வினி ராமனுக்கு இந்திய முறைப்படி இந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் மற்றும் அதன் தொடர்ச்சியாக இந்தாண்டுக்கான ஐபிஎல் 2020 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் கலந்துகொண்டுள்ள மேக்ஸ்வெல், பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் அணி மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, காதலி வினி ராமன் தன்னுடைய காதல் ஏக்கமாக, சமீபத்தில் அவர் மேக்ஸ்வெல்லுடன் ஒன்றாகச் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

அத்துடன், அந்த புகைப்படத்துடன், “இந்த ஊரடங்கில் எனக்கு இன்னொரு வார இறுதியை இந்த லாக்டவுனில் செலவு செய்திருக்கிறேன் என்றும்,  நானும் யு.ஏ.இல் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், காதலனைப் பிரிந்து தவிப்பதின் ஏக்கமாக “தற்போது 4 வாரங்கள் முடிந்து விட்டன, இன்னும் எவ்வளவு நாட்கள் பிரிந்திருக்க வேண்டும்?” என்பது போல், அவர் மிகவும் உருக்கமாகவும், முழுமையான காதலின் ஏக்கமாகவும் அந்த பதிவை, வினி ராமன் பதிவிட்டு இருந்தார்.

அதற்குப் பதில் கருத்து பதிவிட்டிருந்த ரசிகர் ஒருவர், “மனநலம் பாதிக்கப்பட்ட வெள்ளை நிறத்தவரை விட்டு விடு வினி ராமன். அவருக்காக நீ பரிதாபப்பட வேண்டும். துரோகம் செய்யாமல் ஒரு இந்தியரைத் தேடிப் பிடித்துக்கொள்” என்று, குறிப்பிட்டு இருந்தார். 

இதனைப் பார்த்து கடும் ஆத்திரமடைந்த காதலி வினி ராமன், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “நீங்கள் என் பதில் வர வேண்டும் என்பதற்காக தானே இப்படி ஒரு கருத்தைப் போட்டிருக்கிறீர்கள். கண்டிப்பாகப் பதில் தருகிறேன்” என்று குறிப்பிட்டு, அதற்கு சாட்டையடியான ஒரு பதிலையும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிலில், “உங்களைப் போல நான் எந்த நிறத்தையும் பார்ப்பதில்லை. ஒருவர் எந்த நாடு, எந்த இனம் என்று பார்க்காமல் என்னால் அன்பு செலுத்த முடியும். அது முழுக்க முழுக்க என் சுய விருப்பம். இணையத்தில் முகம் அறியாமல், முகம் தெரியாத  ஏதோ ஒருவரது கருத்தை வைத்து எனது வாழ்க்கை முடிவுகளை என்னால் எடுக்க முடியாது. அதை நியாயப்படுத்தவும் எனக்குத் தேவையில்லை. நீங்கள் பார்ப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், கடந்து சென்று விடுங்கள்” என்று நச்சுனு பதில் அளித்துள்ளார்.

இதனைப் பார்த்த பெருமிதம் கொண்ட காதலன் மேக்ஸ்வெல், காதலியின் இந்த பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “உன்னை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன் வினி ராமன். சிலர் இப்படித் தான் உண்மையிலேயே பரிதாபகரமானவர்கள்” என்று, தன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் மற்றும் அவரது காதலி வினி ராமன் ஆகியோரின் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.