“உலகத்திலேயே IPL மேட்ச்ச டெஸ்ட் மேட்ச் மாதிரி விளையாடற கோஷ்டினா.. அது, நம்ம CSK கோஷ்டி தான்” என்று, சென்னை அணிக்கு எதிராக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 

ஐபிஎல் தொடர் ஆரம்பமான கடந்த 2008 முதலே ஆதிக்கம் செலுத்தி வரும் அணிகளில் மிக முக்கியமான ஒரு அணியாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்ந்து வருகிறது.

கேப்டன் மகேந்திர சிங் தோனி

அதே நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலுமே, சாதனை மேல் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு போட்டியிலுமே, சோதனை மேல் சோதனையையே அவர் சந்தித்து வருகிறார்.

அதன்படி, நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி எளிதான வெற்றியைப் பெற்றது. அதற்கு முந்தைய போட்டியில் ராஜஸ்தான் அணி 216 ரன்கள் எடுத்தது. அதன் பின் விளையாடி சென்னை அணி 200 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சென்னைக்கு வெற்றி வாய்ப்புகள் இருந்தும் கூட, சென்னை அணி செய்த சில தவறுகளால் தோல்வியைத் தழுவியது. 

இந்த 2 தோல்விகளும் தான், தோனியின் கேப்டன் ஷிப் பற்றிய புதிய புதிய விமர்சனங்களை எழுப்பி உள்ளது. தோனி இந்திய அணியை வழி நடத்திச் சென்ற போது ஏற்பட்ட சில தோல்விகளில் கூட சம்மந்தப்பட்ட வீரர்களை மட்டுமே பலரும் இதுவரை குறை சொல்லி வந்தனர். ஆனால், தோனியின் கேப்டன் ஷிப் பற்றி  இதுவரை எந்த ஒரு விமர்சனமும் எழாத நிலையில், கடந்த 2 போட்டிகளில் சென்னை அணி விளையாடி விதம், தோனியின் கேப்டன் ஷிப் பற்றிய செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மிகப் பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இதனால், கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட ஒவ்வொரு வீரர்கள் பற்றியும் சென்னை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதாவது, நேற்யை போட்டியில் டெல்லி அணி வீரர் பிரித்வி ஷா, 2 வது பந்தை எதிர்கொண்ட போது பந்து அவரது பேட்டில் லேசாக உரசியது போல சென்றது. அந்த பந்தை தோனி கேட்ச் பிடித்தார். ஆனால், அவுட் எதுவும் கேட்கவில்லை. தீபக் சாஹர் தோனிக்கு அருகில் நின்றிருந்த வாட்சன் என யாருமே அந்த பந்துக்கு நடுவரிடம் அவுட் கேட்கவில்லை. 

அதே நேரத்தில், ரீபிளேவில் அந்த பந்து ப்ரித்வி ஷா பேட்டில் பந்து இன்சைட் எட்ஜ் ஆகி இருப்பது தெரியவந்தது. அதற்கு, சென்னை அணி வீரர்கள் அவுட் கேட்டு இருந்தால், ப்ரித்வி ஷா அப்போதே ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறி இருப்பார். அதற்கு பின் அவர் 64 ரன்கள் குவித்தார். 

அதுவே, சென்னை அணி தோற்க ஒரு காணமாக அமைந்துப்போனது. இதனால், சென்னை ரசிகர்கள் “அனுபவம் மிகுந்த ஒரு கேப்டன் இப்படி செய்யலாமா?” என டிவிட்டரில் கேள்விகளுக்கு மேல் கேள்வியாகக் கேட்டு வருகின்றனர். 

முரளி விஜய்

மேலும், சென்னை அணியில் பேட்டிங்கில் களம் இறங்கும் வீரர்கள் சரியாக செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

குறிப்பாக, தமிழக வீரர் முரளி விஜயின் ஆட்டம் ரசிகர்களை எரிச்சலூட்டும் வகையில் இருக்கிறது. இந்த சீசனில் தொடர்ந்து வரிசையாகக் களம் இறங்கிய 3 போட்டிகளிலும் அவரது ஆட்டம் சுத்தமாக எடுபடவில்லை. இவற்றுடன், அவர் பீல்டிங்கிலும் சாதிக்கவில்லை. சொதப்பவே செய்கிறார். அதனால், முரளி விஜய் அணிக்கு அவசியமாக என்றும், சென்னை ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கி உள்ளனர். 

கேதார் ஜாதவ் - ருத்ராஜ்

அதேபோல சென்னை வீரர் ருத்ராஜ், கேதார் ஆகிய இருவரையும் அணியிலிருந்து ஒரே அடியாக நீக்கி விட்டு அவர்களுக்குப் பதிலாக ராயுடு, பிராவோ உள்ளிட்ட வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்றும், சென்னை ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக சென்னை அணியின் நிர்வாகத்திற்கு ஆலோசனையும், அறிவுரையும் வழங்கித் தொடங்கி உள்ளனர்.

ஜடேஜா

அத்துடன், சிறந்த பீல்டர், ஆல்ரவுண்டர் என புகழப்படும் ஜடேஜா பார்ம் அவுட் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொடரில் அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் 40 ரன்களுக்கு மேல் அவர் வாரி வழங்கி இருக்கிறார். 

4-0-42-2
4-0-40-0
4-0-44-0

இப்படி, விக்கெட்டுகள் எடுக்காமல் ரன்களை வாரி அள்ளிக்கொடுப்பது போதாதென, பேட்டிங் வரிசையிலும் இவரது ஆட்டம் சொல்லிக் கொள்ளும் படியாக 
அமைய இல்லை. 

பியூஸ் சாவ்லா

இந்த சீசனில் அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்ட பியூஸ் சாவ்லா, ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை வாரி வழங்கி வருகிறார். அவரது சுழலும், இந்த சீசனில் எடுபடவில்லை. அவர் பந்து வீசும் ஓவர்களை எதிர் அணியில் பிரிந்து மேய்ந்து வருகின்றனர். இதனால், சாவ்லாவும் பார்ம் அவுட் ஆகி இருப்பதாகவே, சென்னை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அம்பாதி ராயுடு

சென்னை அணி சார்பில் முதல் போட்டியில் வெறித்தோமாக ஆடிய அம்பாதி ராயுடுக்கு, தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகளில் விளையாட கேப்டன் தோனி வாய்ப்பு தரவில்லை. இதனால், 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியையே சந்தித்தது. இதன் காரணமாக, இனி வரும் போட்டியில் சில முக்கிய மாற்றங்கள் சென்னை அணியில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மீம்ஸ்

அதன்படி முரளி விஜய், கேதார் ஜாதவ், ருத்ராஜ் ஆகியோரை அணியிலிருந்து நீக்கப்பட்டு ராயுடு, பிராவோ ஆகியோருக்கு தோனி மீண்டும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும், ரசிகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

முக்கியமாக, “உலகத்திலேயே IPL மேட்ச்ச டெஸ்ட் மேட்ச் மாதிரி விளையாடற கோஷ்டினா.. அது, நம்ம CSK கோஷ்டி தான்” என்று, சென்னை அணிக்கு எதிராக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். சென்னை அணிக்கு எதிராகப் பலரும் மீம்ஸ்களையும் போட்டு, நக்கலடித்து வருகின்றனர். இதனால், சென்னை அணிக்கு எதிரான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகிகொண்டு இருக்கிறது.

தோனி விளக்கம்

இந்நிலையில், இது தொடர்பாக சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய கேப்டன் தோனி, “அம்பாதி ராயுடு அணியில் இணைய வேண்டிய நேரம் வந்து விட்டதாக” குறிப்பிட்டார். 

அத்துடன், “பேட்டிங் வரிசை பல ஏமாற்றங்களை அளிக்கிறது. அணியின் மந்தமான துவக்கம் ரன்ரேட்டை அதிகரித்து அடுத்து வருபவர்களுக்கு பிரஷரை ஏற்படுத்துகிறது. ஒரு தெளிவான திட்டத்துடன் நாங்கள் அடுத்த போட்டியில் கண்டிப்பாகத் திரும்பி வருவோம்” என்றும், தோனி தெரிவித்தார்.

சுரேஷ் ரெய்னா

அதே நேரத்தில், சுரேஷ் ரெய்னா குறித்து இதுவரை கேப்டன் தோனி வாய் திருக்க வில்லை. இதனால், சுரேஷ் ரெய்னா விசயத்தில் சென்னை அணி என்ன திட்டம் வைத்துள்ளது என்றும், பெரும்பாலான ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அத்துடன், சுரேஷ் ரெய்னா அணிக்கு மீண்டும் திரும்பி வர வேண்டும் என்றும், ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சென்னை ரசிகர்களின் இந்த ஒட்டுமொத்த விமர்சனங்கள் மற்றும் கோரிக்கைகளை சென்னை அணியின் நிர்வாகம் கவனித்துக்கொண்டே தான் வருகிறது. இதனால், சென்னை அணியில் கூடிய விரைவில் பல அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம். எதிர்பார்ப்போம்..