ஆபாச குறுச்செய்தி அனுப்பிய இளைஞனை இளம் பெண் ஒருவர், பொதுமக்கள்   முன்னிலையில் தாறுமாறாக அடித்து உதைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் நரேகல் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அப்பகுதியில் வேலைக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த வீரய்யா என்ற இளைஞர், அந்த இளம் பெண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தியை அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பெண்ணும், அந்த இளைஞருக்கும் இடையே ஏற்கனவே அறிமுகம் இருந்து வந்திருக்கிறது. 

இப்படியான, ஆபாச குறுச்செய்தியை தினமும் தொடர்ந்ததால் கடும் அதிர்ச்சியும், ஆந்திரமும் அடைந்த அந்தப் பெண், நேற்றைய தினம் அந்த பகுதியில் உள்ள சாலையில் வந்துகொண்டு இருந்தார்.

அப்போது, அங்குள்ள வீரய்யா சாலையில் சென்றுகொண்டிருந்த போது, அவரைப் பார்த்ததும், மேலும் ஆத்திரமடைந்த நிலையில், அவரை அங்கேயே தடுத்து நிறுத்தி, கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், இன்னும் ஆத்திரமடைந்த அந்த பெண், வீரய்யாவை அடித்து உதைத்து உள்ளார். இதனை 
சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர், அந்த இளம் பெண்ணை கீழே தள்ளி உள்ளார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த பெண், சுதாரித்து எழுந்த நிலையில், மீண்டும், அந்த இளைஞரை தாக்கி உள்ளார். அப்போது, அந்த இளைஞரும் அந்த பெண்ணை தாக்க முயன்ற போது, அந்த பகுதியில் உள்ள பொது மக்கள், அந்த பெண்ணிற்கு ஆதரவாகத் திரண்டு வந்து குரல் கொடுத்தனர்.

இதன் காரணமாக, அந்த இளைஞர் வேறு வழியின்றி, அந்த பெண்ணின் அடியைப் பொறுமையாக வாங்கிக்கொண்டார். அப்போது, அவரை அந்த பெண் மிக கடுமையாக எச்சரித்தார். இதனையடுத்து, அந்த இளைஞர் அங்கிருந்து சென்று விட்டார். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்த காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.