மனைவி மீது கணவன் அளவு கடந்த அன்பு செலுத்தி வந்த நிலையில், “கணவன் என்னிடம் சண்டையே போடுவதில்லை” என்ற விவகாரத்து கேட்ட மனைவிக்கு, “உனக்கு அதுதான் விருப்பம் என்றால், அதையும் நிறைவேற்றுகிறேன்” என்று, கணவன் சம்மதம் தெரிவித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும், “கணவன் என்னை அடித்துத் துன்புறுத்துகிறார். அவர் குடித்து விட்டு வந்த என்னை அடிக்கிறார். வரதட்சணை கொடுமை செய்கிறார். அவர், ஆம்பலையே இல்லை. என் தங்கை மீது ஆசைப்படுகிறார். அதிகம் கோபப்படுகிறார்” என்று தான், விவகாரத்து கேட்கும் பெண்கள் கணவன் மீது சுமத்தப்படும் பெரும்பான்மையான குற்றச்சாட்டாகத் தான் கடந்த காலங்களில் நீதிமன்றம் பார்த்து வந்திருக்கிறது.

ஆனால், தற்போது மிகவும் வித்தியாசமான மற்றும் புதுமையான காரணத்தைக் கூறி, பெண் ஒருவர் விவகாரத்து கேட்டு அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு வினோத சம்பவம் அரங்கேறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஒருவர், அங்குள்ள நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் விவகாரத்து கேட்க அவர் குறிப்பிட்ட காரணம் தான், அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

அந்த மனுவில், “எனக்கு திருமணம் ஆகி 18 மாதங்கள் ஆகிறது. ஆனால், திருமணம் ஆனது முதல் தற்போது வரை என் கணவர் ஒரு சண்டை கூட போடவில்லை. என் மீது ஒவர் லவ்வாக இருக்கிறார். அதீதமாக என்னை நேசிக்கிறார். இதுவரை என்னை யாரும் அப்படி விரும்பியது கிடையாது.

மேலும், வீட்டில் சமைப்பதற்குக் கூட எனக்கு அவர் சின்ன சின்ன வேலைகள் செய்து எனக்கு உதவியாக இருக்கிறார். அவர் என் மீது காட்டும் இந்த அளவு கடந்த அன்பு, எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் என்ன தவறு செய்தாலும், என் கணவர் என்னிடம் எந்த சண்டையும் போடுவதில்லை. என்னை மன்னித்து விடுகிறார். ஒரு வார்த்தை கூட கடினமான வார்த்தையைப் பயன்படுத்தி என்னைத் திட்டுவதும் இல்லை. என்னுடைய எல்லாவிதமான செயல்பாடுகளும், அவருக்குப் பிடித்துவிடுகிறது. எனக்காக என் கணவர் ஒத்துப்போகிறார். துளிகூட சத்தம் போட்டு இதுவரை அவர் என்னைத் திட்டியதே இல்லை.

எனக்கு அவருடன் சண்டை போட வேண்டும். என் கணவரின் அதீத காதல் எனக்கு வேண்டாம். என் கணவரின் இந்த அன்பால், எனது 18 மாத திருமண வாழ்க்கை எனக்குப் பிடிக்காமல் போய் விட்டது. அதனால், எனக்கு விவகாரத்து வேண்டும்” என்று, அந்த மனுவில் கூறியுள்ளார்.

மேலும், “எனக்கு விவகாரத்து வேண்டும் என்று, அவரது மனைவி கேட்ட போது கூட, “உனக்கு அது தான் விருப்பம் என்றால், அந்த ஆசையையும் நான் நிறைவேற்றுகிறேன்” என்று, கணவன் சம்மதம் தெரிவித்ததையும் குறிப்பிட்டு, அவரின் மனைவி குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “விவகாரத்து பெற காரணம் சரியாக இல்லை எனக் கூறி” அவரது மனுவை நிராகரித்துவிட்டார்.

இதனையடுத்து, அந்த பெண் உள்ளூர் பஞ்சாயத்தில் தனது பிரச்சினையைக் கொண்டு சேர்த்துள்ளார். இது தொடர்பாகப் பஞ்சாயத்து பேசிய பிரமுகர்கள், அங்கேயும் “காரணம் சரியாக இல்லை” என்று, அதனை நிராகரித்துவிட்டனர்.

இதன் காரணமாக, அந்த பெண் மீண்டும் கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிழ்வு தற்போது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.