“நீ எல்லாம் ஒரு அழகா?  உன்னை யாரும் பலாத்காரம் செய்திருக்க மாட்டார்கள்” என்று, புகாரளிக்கச் சென்ற பெண்ணிடம் போலீசார் மெத்தனமாகப் பேசிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ககாடியோ காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், தாய் - தந்தை இழந்த நிலையில், தனது தாய் வழி பாட்டில் வீட்டில் தங்கி வருகிறார்.

அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, பாட்டியுடன் வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், பாட்டி வெளியே சென்றிருந்த நிலையில், அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரம் பார்த்து உள்ளூர் உள்ளூர் ரவுடி ஒருவன், தனது கூட்டாளியுடன் சேர்ந்து சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியைத் தாக்கி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

மேலும், சிறுமியின் ஆடைகளைக் கிழித்தும், சிறுமி மீது மது பானங்களை ஊற்றியும், சிறுமியை மிருகத் தனமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. இதனால், சிறுமி வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுக் கத்தி உள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்க ஓடி வந்துள்ளனர். 

அக்கம் பக்கத்தைச் சேர்ந்த மக்கள் வருவதைக் கவனித்த அந்த ரவுடி, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். இதனையடுத்து, கிராம மக்கள் அந்த சிறுமியை மீட்டனர். 

இதனையடுத்து, தன்னை பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி மீது, பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி புகார் அளித்தார். அப்போது, போலீசார் சிறுமியின் புகாரைப் பெற்றுக்கொள்ளாமல், “நீ எல்லாம் ஒரு அழகா?  உன்னை யாரும் பலாத்காரம் செய்திருக்க மாட்டார்கள், நீ அவ்வளவு அழகெல்லாம் இல்லை” என்று, உதவி செய்வதற்குப் பதிலாக, சிறுமியிடம் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் போலீசார் இப்படி ஒரு பதிலை அளித்துள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமி, அந்த பகுதியின் ஊடகத்தின் முன்பு, போலீசாரின் இந்த செயல்பாடு குறித்து பதில் அளித்தார். இதனையடுத்து, சம்மந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், கடந்த மாதம் இதே உத்தரப் பிரதேச மாநில்தில் உள்ள கோவிந்த் நகர் காவல் நிலையத்திற்கு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி புகார் அளிக்கச் சென்ற சிறுமியிடம், “ நீ நடனமாடினால் நாங்கள் வழக்குப் பதிவு செய்கிறோம்” என்று, போலீசார் கூறிய நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியும் காவல் நிலையத்தில் நடனமாடினார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, உத்தரப் பிரதேச மாநில்தில் அதே போன்று பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியை “நீ எல்லாம் ஒரு அழகா? உன்னை யாரும் பலாத்காரம் செய்திருக்க மாட்டார்கள்” என்று,  போலீசார், இப்படி மெத்தனப் போக்குடன் பேசிய விசயம், மீண்டும் அந்த மாநிலத்தில் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.