சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதராக ராபர்ட் ஜி புர்கேஸின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய துணைத் தூதராக ஜூடித் ரேவின் நேற்று பதவி ஏற்றார். இவர் பெரு நாட்டின் லீமா நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 2017-ம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை ஆலோசகராக பணிபுரிந்தார். 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை வாஷிங்டனில் உள்ள ஹெய்டி சிறப்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் சர்வதேச உறவுகள் அதிகாரியாக பணியாற்றினார்.

2003-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறையில் சேருவதற்கு முன்பாக ஜூடித் ரேவின், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பு ஆசிரியர், பத்திரிகை நிருபர் என பன்முக தன்மையாளராக விளங்கினார். ஜூடித் ரேவின் தனது இளங்கலை படிப்பை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களில் படித்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் சரளமாக பேசுவார்.

ஜூடித் ரேவின், 2013 முதல் 2015 வரை இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துணை கலாச்சார உறவு அதிகாரியாகவும், பின்னர் தேசிய கலாச்சார உறவு அதிகாரியாக உலகமெங்கும் உள்ள அமெரிக்க அரசின் மிகப்பெரிய பரிமாற்ற வர்த்தமான திட்டங்களைப் மேற்பார்வையிட்டார்.

2015 முதல் 2017 வரை வாஷிங்டனிலுள்ள ஹெய்டி சிறப்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் சர்வதேச உறவுகள் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர், லீமாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் 2017 முதல் 2020 வரை வெளியுறவுத்துறை ஆலோசகராகப் பணிபுரிந்துள்ளார்.

சென்னையில் துணை தூதராக அவர் பணியாற்றக்கூடிய பதவியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய தூதரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்தியா-அமெரிக்கா உறவுகளை மேம்படுத்தும் பொறுப்பை மேற்கொள்வார்.

தனது இந்த புதிய பதவி குறித்து காணொளி வடிவில் பேசியிருக்கும் அவர், அதில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கான அமெரிக்க பிரதிநிதியாக செயல்படுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஜூடித் ரேவ் சென்னைக்கு வருவதற்கு முன் பெரு நாட்டின் லிமாவில் அமெரிக்க தூதரகத்தில் பொதுவிவகார ஆலோசகராக பணியாற்றியுள்ளார். பாகிஸ்தான், சூடான், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள ஜூடித் ரேவின், ``சென்னையில் இந்த பொறுப்பை ஏற்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னிந்தியாவிற்கு அமெரிக்காவின் பிரதிநிதியாக இருப்பது சந்தோசம் தருகிறது. அதிலும், கொரோனா காலத்தில் நான் இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். கண்டிப்பாக சிறப்பாக எனது பணியை செய்வேன். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகளுக்கான பிரநிதியாக திறமையாக செயல்படுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.