அரியர் மாணவர்களுக்கான தேர்ச்சி அறிவிப்பில் குழப்பம் நிலவும் நிலையில், இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், பொறியியல் மாணவர்களின் தேர்ச்சியை ஏற்க முடியாது என இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் இருந்து மின்னஞ்சல் வந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறியிருப்பதை சுட்டிக்காட்டி இருந்தார்.

அதேநேரம் இன்றைய தினம் அரியர் தேர்வு தொடர்பாக ஏஐசிடிஇ, யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் தமிழக அரசுக்கு வரவில்லை என்று கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். ``அரியர் தேர்வு தொடர்பாக ஏஐசிடிஇ, யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை. கடிதம் வந்ததாக கூறும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா என்ன பதில் கடிதம் எழுதினார்" என அமைச்சர் கேட்டுள்ளார். இன்னொரு பக்கம், அரியர் தேர்ச்சி தொடர்பாக யூஜிசியிடம் இருந்து  எந்த கடிதமும் வரவில்லை என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ``அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என அரசு அறிவித்ததை ஏற்க முடியாது" என ஏஐசிடிஇ கூறியதாக சூரப்பா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அரியர் மாணவர்களின் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேநேரம், அரியர் மாணவர்களின் தேர்ச்சி ரத்தாகுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் பொறியியல் அரியர் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்திருக்கிறார்.

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியிருக்கிறார். அந்த உறுதியுடன் அரியர் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்து ஆணை வெளியிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உயர் கல்வித்துறைக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது மாணவர்களிடையே குழப்பதை உண்டாக்கியுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொறியியல் அரியர் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.