“நான் மாட்டு மூத்திரம் குடிக்கிறேன்.. எனக்கு கொரோனா வராது” என்று, பாஜக எம்.பி பிரக்யா சிங் கூறியுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபல் மக்களவை உறுப்பினரான பிரக்யா சிங், கடந்த தேர்தலின்போது, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை வீழ்த்தி வெற்றி பெற்றவர் ஆவர். 

பாஜக மக்களவை உறுப்பினரான பிரக்யா சிங் தாகூர், எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவர். அவர், எது பேசினாலும் அது சர்ச்சையாக வெடித்துக் கிளம்பும் அல்லது அது, பேசும் பொருளாக மாறும். அந்த வகையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைப் பேச்சில் சிக்கியுள்ளார்.

விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர், “நான் மாட்டு மூத்திரத்தைத் தான் தொடர்ந்து குடித்து வருகிறேன் என்றும், அதனால் எனக்கு ஒரு போதும் கொரோனா வைரஸ் பாதிப்பானது வரவே வராது” என்றும் பேசியுள்ளார். 

பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாகூரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. 

“கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலையின் போது, மாட்டின் மூத்திரத்தை மக்களுக்குப் பரிந்துரை செய்து கடும் விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளானார். 

அதன் தொடர்ச்சியாக, “காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே உண்மையான தேச பக்தன்” என்று பேசி, மீண்டும் சர்ச்சையில் சிக்கியனார் பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங். இப்படியாக எம்.பி. பிரக்யா சிங், வாய் விட்டு பேசினாலே, அது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது “நான் மாட்டு மூத்திரம் குடிக்கிறேன்.. எனக்கு கொரோனா வராது” என்று, பேசி தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

முன்னதாக, குஜராத் மாநிலத்தில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயாணா குருகுல் விஸ்வித்யா பிரதிஷ்டான் சார்பில் நடத்தப்படும் கோ-சாலையில், கொரோனா தாக்காமல் இருக்க மாட்டுச் சாணம் சிகிச்சை அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாய் வெடித்தது. இங்கு வரும் பலரும் மாட்டுச் சாணத்தை உடலில் பூசிக்கொண்டு, யோகா செய்தபின் மாட்டுப்பால் மற்றும் மோர் ஆகியவற்றால் உடலை சுத்தம் செய்து மாட்டுச் சாணம் குளியல் எடுத்து வருகின்றனர். 

இப்படிச் செய்வதால், கொரோனா தாக்காது என்று அவர்கள் கூறி தொடங்கினார்கள். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து வெளியான நிலையில், “இந்த மாதிரியான சிகிச்சையால் எந்தப் பயனும் இல்லை. உடலின் கழிவுதான் மாட்டுச் சாணம். அதை உடலில் பூசிக்கொள்வதால் எந்த எதிர்ப்பு சக்தியும் ஏற்படப் போவதில்லை” என்று, சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதே போல், வெளியான மற்றொரு வீடியோவில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் பைரியா சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான சுரேந்தர் சிங், கோமியம் குடிக்கும் வீடியோ வெளியாகிப் பேசும் பொருளாக மாறியது. 

அந்த வீடியோவில், “கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் பெரும் பிரச்னைகளை சந்தித்து வரக்கூடிய நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாகக் கோமியம் குடிக்க முன்வர வேண்டும்” என சுரேந்தர் சிங் கொரிக்கை விடுத்தார். 

இதனால், “கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் பெரும் பிரச்னைகளை சந்தித்து வரக்கூடிய இந்த இக்காட்டான நிலையில், இதுபோன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது” என்று, பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

அப்போது, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், “இந்த மாட்டுச் சாணக் குளியல் வீடியோவை பகிர்ந்து, “நாங்கள் இதை நினைத்து அழ வேண்டுமா அல்லது சிரிக்க வேண்டுமா” என்று ஆதங்கத்துடன் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.