கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி ஒருவர், ஆண் செவிலியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதைகள் அவ்வப்போது நடப்பதுண்டு. அப்படி, வேலியே பயிரை மேய்ந்த கதைதான் தற்போதும் அரங்கேறி இருக்கிறது. 

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் 2 வது அலை மிக கடுமையாக இருக்கிறது. இதனால், நாள் தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அதற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த இக்கட்டான நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்படும் நோயளிகளை காப்பாற்ற, முன்கள பணியாளர்களான மருத்துவர்களும், செவிலியர்களுமே சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்து வருகின்றனர். ஆனால், அதிகாரி திமிரில், ஒரு சிலர் அத்துமீறி நடந்துகொள்ளும் சம்பங்களும் நாட்டில் அவ்வப்போது நடந்துகொண்டு தான் இருக்கிறது. 

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் அங்குள்ள போபால் அரசு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த 40 வயதான சந்தோஷ் ஆஹிர்வார் என்ற ஆண் செவிலியர், அந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்று உள்ளார்.

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த அரசு மருத்துவரிடம் பாதிக்கப்பட்ட பெண், எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். அதே நேரத்தில், அவரின் உடல் நிலை அப்போது மேலும் மோசமடைந்து உள்ளது. இதனால், அன்றைய தினம் மாலையே அவரின் உடல் நிலை இன்னும் தீவிரமாக மோசமடைந்து வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் அன்றே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், அந்த பெண் உயிரிழந்தது தொடர்பாக அங்குள்ள நிஷத்புரா காவல் நிலையத்தில் ஆண் செவிலியர் 
சந்தோஷ் ஆஹிர்வார் மீது புகார் அளித்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆண் செவிலியரை கைது 
செய்து போபால் மத்திய சிறையில் அடைத்தனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண், உயிரிழக்கும் முன்பாக “என்னைப் பற்றிய தகவல்களை வெளியில் கூறிவிட வேண்டாம்” என்று, மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணமாக, அந்த பெண் பற்றிய தகவலை போலீசார் வெளியே கூற மறுத்துவிட்டனர்.

குறிப்பாக, பாலியல் பலாத்காரம் செய்த ஆண் செவிலியர், பணி நேரத்தில் குடித்துவிட்டு சக பெண் செவிலியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் ஏற்கனவே அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் அப்போது தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்ற தகவலும் போலீசாருக்கு தெரிய வந்தது. 

முக்கியமாக, “பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உயிரிழந்த பெண், கடந்த 1984 ஆம் ஆண்டு போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களுள் ஒருவர்” என்றும் கூறப்படுகிறது.