14 வயது சிறுமியை 22 நாட்களாக, 45 வயது உறவினர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மிகவும் ஏழ்மையான அந்த சிறுமி, அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். 

தற்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக, அந்த சிறுமி, தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார். 

இப்படியான சூழ்நிலையில், அந்த சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்துச் சென்ற 45 வயதுடைய உறவினர் ஒருவர், சிறுமியிடம் ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி மயக்க முயன்று உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அந்த 14 வயது சிறுமி திடீரென்று மாயமானார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அந்த பகுதி முழுவதும் சிறுமியைத் தேடி அலைந்து உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து சிறுமியை மிகத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில், மாயமான சிறுமி அங்குள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தில் இருக்கும் போகாரன் என்ற பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்துச் சென்ற தனிப்படை போலீசார், அங்கிருந்து சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். அப்போது, சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால், சிறுமியை அங்கிருந்து மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு, சிறுமிக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளும், அதன் தொடர்ச்சியாகச் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை அவரது உறவினர் ஒருவரே கடத்திச் சென்று, அங்குள்ள போகாரனில் கட்டடப் பணிகள் நடக்கும் இடத்தில் மறைத்து வைத்து, கடந்த 22 நாள்களாக இந்த சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த சிறுமியின் 45 வயது உறவினரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.