கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது போக்குவரத்து சேவைகள், செப்டம்பர் மாத தொடக்கம் முதல், நாடு முழுவதும் படிப்படிகயாக தளர்த்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு அனுமதி அளித்ததன்படி, தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் தற்போது இயக்க்கப்பட்டு வருகின்றன. மேலும் 3 சிறப்பு ரயில்கள் வரும் 12 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. 

இந்நிலையில், தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், 

தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது. பொதுமுடக்கம் காரணமாக, வருவாய் இன்றி, நாடு முழுக்க பலர் அவதிப்பட்டு வரும் நிலையில், முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கபட்டு வந்த இந்த சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது, நியாயமில்லை' என்று நேற்று பதிவிட்டார்.

இந்நிலையில், ரயில்வே சார்பில், இதற்கான விளக்கம் தரப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த விளக்கத்தில், வயதானவர்கள் இந்த நேரத்தில் (கொரோனா பரவல் அச்சம் அதிகமுள்ள நேரம்) பொது போக்குவரத்தை பயன்படுத்துவது ஆபத்தானது என்பதால் தான் இந்த நடைமுறையை கொண்டு வந்திருப்பதாக கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது. இவையாவும் தற்காலிகமாகத்தான் செய்யப்படுகின்றது என்றும், விரைவில் மீண்டும் இயல்புக்கு திரும்பும் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

வழக்கமான ரயில் போக்குவரத்து எதுவும் தொடங்கப்படாததால், சிறப்பு ரயில்களிலில் கொரோனா அச்சம் காரணமாக பலரும் வீடுகளில் இருந்தே ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

ரயில்வே தரப்பில் வயதானவர்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும் என சொல்லப்பட்டாலும், பொதுமக்கள் தரப்பில் விழிப்புஉணர்வு எந்தளவு உள்ளது என்பது கேள்விக்குறிதான். பொதுவாக, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தென் மாவட்ட மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல, 3 மாதங்களுக்கு முன்பே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி வருகிற நவம்பர் மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து, தற்போது தீபாவளிக்கான முன்பதிவும் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, மதுரை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களில் நவம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்து விட்டன.

இதேபோல், கோவை, திருச்சி, காரைக்குடி ரயில்களிலும் தீபாவளி முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கினால் தீபாவளி சமயத்தில் தங்களுக்கு வசதியாக இருக்கும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஒருபுறம் கொரோனா பரவலும் அதிகரித்து கொண்டே இருக்க, தீபாவளி சமயத்தில் கூட்ட நெரிசலில் பயணிகள் சிக்குவதற்கு இடமளிக்காமல் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கொரோனா பரவலை பொறுத்தவரை, அரசால் நடைமுறைகளை அமலுக்கு கொண்டுவருவது மட்டுமே இயலும். அவற்றை சாத்தியப்படுத்துவதற்கான தேவை, மக்களாகிய நம் கைகளில் தான் இருக்கிறது.