ஃபேஸ்புக்கில் பழகிய நபரை நேரில் வரவைத்து நிர்வாணப்படுத்தி மிரட்டிய பெண் வழக்கில் அதிரடி திருப்பமாக, பின்னணியில் திருமண நிச்சயம் செய்யப்பட்ட வருங்கால கணவன் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 28 வயதான வினோத் குமார், அதே பகுதியில் வெப் டிசைனாராகப் பணியாற்றி வருகிறார். வினோத்திற்கு திருமணம் ஆன நிலையில், அவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தையும் உள்ளனர். வினோத் வெப் டிசைனர் என்பதால், எந்நேரமும் ஆன்லைனிலேயே அவர் இருப்பது வழக்கம். 

அந்த தருணத்தில், திருச்சியைச் சேர்ந்த நிஷா என்ற இளம் பெண், வினோத்திற்கு ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலமாக ஒரு ஆபாசப் படத்தை அனுப்பி வைத்து, அவருக்கு நட்புக்கான அழைப்பு விடுத்து உள்ளார். அந்த ஆபாசப் படத்தைப் பார்த்தும், நட்பு அழைப்பு விடுத்தது பெண் என்பதாலும் வினோத், சபலப்பட்டுள்ளார். இதனால், சபலம் மற்றும் டபுள் மீனிங் சாட்டிங் அவர்கள் இருவருக்குள்ளும் தொடர்ந்து நடைபெற்று உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, இருவரும் தங்களது செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டு தங்களுக்குள் காதல் வளர்க்கத் தொடங்கி உள்ளனர். இதனையடுத்து, இருவரும் மணிக்கணக்கில் பேசியும், சாட் செய்தும் வந்துள்ளனர். இருவரும் இப்படியே போனிலேயே பேசிக்கொண்டு வந்த நிலையில், நிஷாவிடம், “நான் உன்னை நேரில் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறி உள்ளார். அதன்படி, இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்து, திருச்சிக்கு வருமாறு, வினோத்தை நிஷா அழைத்து இருக்கிறார். 

திட்டமிட்ட படி, கடந்த 5 ஆம் தேதி வினோத் திருச்சியில் உள்ள காஜாமலை பகுதியில் உள்ள பள்ளியின் அருகே வந்து நின்றுள்ளார். அப்போது, இளம் பெண் நிஷாவும் அங்கு வந்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக இருவரும் அங்கே தனியாக நின்று பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று அந்த பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் 6 பேர், கையில் பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்து வினோத்தை கண்மூடித்தனமாகத் தாக்கி விட்டு அவர் வைத்திருந்த பர்ஸ், ஸ்மார்ட் போன், அவருடைய வங்கி ஏ.டி.எம். கார்டு, அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் என எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர். அத்துடன், வினோத்தை அடித்து அவர் அணிந்து இருந்த ஆடைகளை அவிழ்த்து அவரை நிர்வாணப்படுத்தி, அவரை வீடியோவும் எடுத்து மிரட்டி உள்ளனர். 

மேலும், இது தொடர்பாக வெளியே கூறினால், இந்த வீடியோவை இணையத்தில் பரப்பி விட்டு விடுவதாகவும் கூறி, அவர்கள் மிரட்டி விரட்டி அடித்து உள்ளனர். தன்னை ஒரு பெண் ஏமாற்றி நேரில் வர வைத்து, அடித்து அவமானப்படுத்தி, தன்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு விரட்டி அடித்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாத வினோத், திருச்சியில் உள்ள கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், நிஷா இருக்கும் இடத்தை வைத்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, நிஷா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வினோத்தை மிரட்டி எல்லா பொருட்களையும் பறித்துக்கொண்டு விரட்டி அடித்த அந்த 6 பேர் கொண்ட கும்பலையும் தீவிரமாகத் தேடி வந்தனர். 

மேலும், கைது செய்யப்பட்ட நிஷாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், “கைது செய்யப்பட்ட நிஷாவின் முழு பெயர் ரகமத்நிஷா என்பதும், இவர் திருச்சி காஜாமலையைச் சேர்ந்தவர் என்றும், பி.எஸ்சி 3 ஆம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி என்பதும்” தெரிய வந்தது.

அத்துடன், “ரகமத் நிஷாவுக்கும், காஜாமலையைச் சேர்ந்த அன்சாரி ராஜா என்ற இளைஞருக்கும் கடந்த 3 ஆம் தேதி திருமணம் செய்ய இருவீட்டார் பெற்றோரும் முடிவு செய்து உள்ளனர். 

அதே நேரத்தில், திருமணம் முடிவான அன்சாரி ராஜா, டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து விட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல், தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து ஃபேஸ்புக் மூலம் நட்பாகப் பழகி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த மோசடி வேலையில், தற்போது கல்யாணம் செய்துகொள்ள இருக்கும் ரகமத்நிஷாவையும் அவர் இணைத்துக்கொண்டார். 

இப்படிப்பட்ட நேரத்தில், கல்யாணம் செய்து கொள்ள இருக்கும் ரகமத் நிஷாவிடம் ஏற்கனவே அறிமுகமாகி உருகி உருகிப் பேசி வந்த வினோத்குமாரிடம், ஆசை ஆசையான வார்த்தைகளையும், ஆபாசமாகவும் பேச சொல்லி  ரகமத் நிஷாவுக்க, திருமணம் செய்து கொள்ள உள்ள அன்சாரி ராஜா புது புது யோசனைகளைக் கொடுத்து உள்ளார். தன்னுடைய எதிர்கால கணவர் கூறியபடியே, ரகமத்நிஷாவும் வினோத்திடம் ஆசை ஆசையான வார்த்தைகளைப் பேசி அவரை நம்ப வைத்து, நேரில் வரவழைத்து இருக்கிறார். அதன் பிறகு தான், இந்த வழிபறி மோசடி அரங்கேறி இருக்கிறது.

குறிப்பாக, இந்த மோசடிக்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டது ரகமத்நிஷாவின் வருங்கால கணவர் அன்சாரி ராஜா தான் என்பதும் தெரிய வந்தது. அவனுக்கு உடந்தையாக அவனது கூட்டாளிகள் 5 பேர் இருந்ததும் தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக, அவர்கள் அனைவரையும் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களை வலைவீசித் தேடி வந்தனர். 

இந்நிலையில், அன்சாரி ராஜா மற்றும் காஜாமலை பி.வி.எஸ். நகரைச் சேர்ந்த அன்சாரி பிலால் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். மேலும், கைதான அன்சாரி பிலால், திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினீயரிங் 2 ஆம் ஆண்டு படித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வரும் நிலையில், இந்த கும்பல் வேறு யாரை எல்லாம் இதே போன்று ஏமாற்றி இருக்கிறார்கள் என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.