“தீரன்” பட பவாரியா கும்பலுக்கு டப் தரும் வகையில், கிருஷ்ணகிரி அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது அனைவரையும் பீதியடையச் செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் வேலையில்லாமல் தவித்து வரும் நிலையில், அதில் சிலர் பல்வேறு குற்றச் சம்பங்களில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியானது. இதனால், வீட்டில் தனியாக இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படியும், அறிவுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், “தீரன்” பட பவாரியா கும்பலுக்கு டப் தரும் வகையில், கிருஷ்ணகிரி அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் ஒரு கொள்ளை கும்பல், கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் பீதியை தற்போது ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் உள்ள வேலு நகரில் வசித்து வரும் பார்த்திபன், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2 ஆம் தேதி, பார்த்திபன் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் அவருடைய மனைவி சர்மிளா மட்டும் தனியாக இருந்து உள்ளார். அப்போது, மாலை நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான பூமிகா என்ற இளம் பெண், கிழிந்த துணிகளைத் தைத்துத் தருவதாக சர்மிளாவின் வீட்டிற்குள் வந்து உள்ளார்.

சர்மிளா வீட்டிற்குள் பூமிகா நுழைந்த அடுத்த சிறிது நேரத்தில், 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் திபு திபுவென்று வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, சர்மிளா மற்றும் அவரது மகன்களை கத்தியைக் காட்டி மிரட்டி, சர்மிளா அணிந்திருந்த தாலி செயின், 2 தோடுகள், மோதிரங்கள் உள்ளிட்ட எட்டே கால் பவுன் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை மிரட்டிப் பறித்துக்கொண்டனர். 

மேலும், அங்கு நின்ற பூமிகாவின் தோடையும் அவர்கள் பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சர்மிளா, தனது கணவருக்குத் தகவல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவரும் வீட்டிற்கு விரைந்து வந்த நிலையில், கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து அங்குள்ள ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சர்மிளா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சினிமா பாணியில் பட்டப் பகலில் கத்தி முனையில் கொள்ளையடித்த கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, கடந்த 7 ஆம் தேதி பூமிகா மற்றும் பிரசாந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, பெங்களூரு அருகே பொம்மசந்திரதின்னே பகுதியைச் சேர்ந்த 25 வயதான சஞ்சய் குமார், ஒசதுர்கா பகுதியைச் சேர்ந்த 25 வயதான புட்டராஜூ, அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான கிரண் மற்றும் சிக்காரிபாளையம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான நாகராஜ் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் அடுத்தடுத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். 

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சர்மிளா வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட எட்டே கால் பவுன் நகைகளும், பிற இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 3 இரு சக்கர வாகனங்களும் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, இந்த கொள்ளை கும்பல், வேறு எங்கெல்லாம் தங்களது கை வரியைக் காட்டி கொள்ளையடித்து இருக்கிறார்கள்? என்பதும் குறித்தும், அந்த நகைகளை எங்கே பதுக்கி வைத்து இருக்கிறார்கள் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, “தீரன்” பட பவாரியா கும்பலுக்கு டப் தரும் வகையில், பட்டப் பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் ஒரு கொள்ளை கும்பல், கொள்ளையடித்து சென்ற சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.