“சமந்தா - நாக சைத்தன்யா” பிரிவு குறித்து, நடிகரும் நாகசைத்தன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜூனா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

“அழகு சிலையொன்று.. அழகற்று காணப்பட்டால், அதைப் பார்க்க யாரது கண்கள் பொறுத்துக்கொள்ளும்?”

“உள்ளார்ந்த பூத்துக்குளுங்கிய புன்னகையெல்லாம், உடைப்பட்டு.. உமையாகி, உள்ளார்ந்து கண்ணீர் வடித்தால், யாரால் பார்த்து ரசிக்க முடியும்?”

யார் கண்டு பட்டதோ தெரியவில்லை? சமந்தா - நாக சைத்தன்யா என்னும் ஒரு அழகான ஜோடி, மயான அமைதிக்கு ரசிகர்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

தமிழில் வெளியான “விண்ணைத்தாண்டி வருவாயா” படம் தெலுங்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு “ஏ மய்யா சேசவு” (Ye Maaya Chesave) என்ற பெயரில் வெளியானது. 

இந்த படத்தில், நாக சைதன்யா - சமந்தா ஜோடியாக நடித்தபோது அவர்களுக்குள் காதல் பூத்தது. 

அதாவது, சென்னையில் பிறந்த சமந்தா, ஐதராபாத்தில் பிறந்த சைதன்யா இருவரும் இந்த படத்தின் மூலம் சந்தித்து நட்பாகப் பழகி, பின்னர் இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. 

ஒரு பக்கம் காதல் மற்றொரு பக்கம் படங்கள் என்று இருவரும் பிஸியாக இருந்து வந்த ஜோடி, கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தனர். 

ஆனால், மற்ற நடிகைகள் போல் இல்லாமல், திருமணமான பிறகும் நடிகை சமந்தா, படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஜோடியாக நடித்த “Majili” என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கிட்டதட்ட 11 ஆண்டுகள் காதலித்துவந்த இந்த அழகு ஜோடி, திருமணத்திற்கு பிறகும் ஒட்டுமொத்த ரசிகர்கள் பட்டாளத்தையும் கட்டி ஆண்டு வந்தது. 

அதே போல், ஏறக்குறைய இந்த அழகு ஜோடி கடந்த 5 ஆண்டுகளாக இல்லற வாழ்வில் இன்புற்றுத் திளைத்து ஊர் போற்றும் தம்பதிகளாக உலா வந்த நிலையில், யார் கண் பட்டதோ தெரியவில்லை, சமீப காலமாக தங்களைப் பற்றி வந்த வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக நேற்றைய தினம் 2 ஆம் தேதி தங்களது திருமண வாழ்க்கை முடிவடைந்துவிட்டதாக இருவரும் அறிவித்து, ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களையும் சுக்கு நூறாக உடைத்துவிட்டனர்.

நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகியோர் “ஒத்த மனத்துடன் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக” இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், “சமந்தா - நாக சைத்தன்யா பிரிவு குறித்து நடிகர் நாகார்ஜூனா கூறியுள்ள பதிவில், “கனத்த இதயத்துடன், இதைச் சொல்கிறேன். சாமுக்கும் (சமந்தா) சாய்க்கும் (நாக சைத்தன்யா) இடையில் என்ன நடந்தாலும் அது மிகவும் துரதிருஷ்டவசமானது. மனைவிக்கும் - கணவனுக்கும் இடையே நடப்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். இருவரும் எனக்கு அன்பானவர்கள்” என்று, மிகவும் உருக்கமாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“சமந்தாவுடன் செலவழித்த தருணங்களை என் குடும்பத்தினர் எப்போதும் மறக்கமாட்டார்கள். அவள் எப்போதும் எங்களுக்கு அன்பாக இருப்பாள். கடவுள் அவர்கள் இருவரையும் பலத்துடன் ஆசீர்வதிப்பாராக” என்று நடிகர் நாகார்ஜூனா மிகவும் உருகும் விதமாகத் தனது மனதில் உள்ளதைப் பதிவிட்டு உள்ளார்.

நடிகர் நாகார்ஜூனாவின் இந்த பதிவு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.