மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சீசனுக்குத் தகுந்தார் போல், பெண் குரலில் பேசி கடை உரிமையாளர்களிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் உள்ள கடைகளுக்குப் பெண் ஒருவர் போன் செய்து சில பொருட்களுடன், பணத்தையும் மோசடி செய்து வருவதாக அந்த பகுதி போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்த 40 வயதான மணிஷ் அம்பேகர் என்பவர் தான், பெண் குரலில் பேசி மோசடி இந்த கொரோனா ஊரடங்கு காலத்திற்கு தகுந்தார் போல், இப்படியான ஒரு கொரோனா சீசன் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், “கைது செய்யப்பட்ட 40 வயதான மணிஷ் அம்பேகர், இயல்பாகவே பெண் குரலில் பேசுவதை வழக்கம் என்பதும் தெரிய வந்தது. மற்றவர்களை மனம் கவர அவர் இவ்வாறு அடிக்கடி பெண் குரலில் பேசி அசத்துவார்” என்பதும் தெரிய வந்தது.

ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் வேலை மற்றும் வருமானம் இன்றி தவித்து வருவது போல், மணிஷ் அம்பேகரும் வேலை மற்றும் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார். 

இந்நிலையில், சற்று கிரிமினலாக யோசித்த மணிஷ் அம்பேகர், தனது அன்றாட வருமானத்திற்காக சில மோசடிகளை அரங்கேற்றத் திட்டம் போட்டார்.

அதன்படி, அந்த பகுதியில் உள்ள கடைகள், நகைக்கடை, மருந்துக் கடை என்று மொத்த வியாபார கடை ஆகிய இடங்களுக்கு நேரடியாகச் சென்று, அந்த கடைகளின் செல்போன் நம்பரைப் பெற்று சேகரித்து வந்தார். இப்படியாக நில நாட்கள் அந்த கடையின் செல்போன் எண்களை சேகரிப்பதிலேயே குறியாக இருந்து உள்ளார்.

இப்படி, பல கடைகளின் செல்போன் எண்களைச் சேகரித்த பின்பு, ஒவ்வொரு கடைக்கும் குறிப்பிட்ட அந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு, பெண் குரலில் பேசி சில பொருட்களை ஆர்டர் செய்து உள்ளார். அத்துடன், தான் ஆர்டர் செய்யும் பொருட்களுடன் 2 ஆயிரம் ரூபாய்க்கு மீதி சில்லறை கொடுத்து அனுப்பிவிடும் படியும் அவர் கூறுவார். 

இப்படி, எதிர் முனையில் பெண் குரலில் பேசுபவரை நம்பி, கடை உரிமையாளர்களும் தன் கடையில் வேலை பார்க்கும் ஊழியரிடம் குறிப்பிட்ட அந்த பொருட்களையும், 2 ஆயிரம் நோட்டை அப்பெண்ணிடம் பெற்று வருவதற்காக மீதி சில்லறையும் அவர்கள் கொடுத்து அனுப்பி வந்தனர். 

அதன்படி, சம்மந்தப்பட்ட கடையில் இருந்து கடையின் ஊழியர் வருவதைத் தூரத்தில் பார்க்கும் பெண் குரலில் பேசி பொருட்களை ஆர்டர் செய்த மணிஷ் அம்பேகர், தான் கூறும் குறிப்பிட்ட முகவரியின் கட்டிடத்தின் வெளியே நின்று கொண்டு கடை ஊழியர்களுக்காக காத்திருப்பார். அதன்படி, அங்கு வரும் கடையின் ஊழியரிடம், ஆர்டர் கூறிய பெண் அனுப்பியதாகக் கூறி அந்த பொருட்களையும், மீதி பணத்தையும் பெற்றுக் கொண்டு, “2 ஆயிரம் பணத்துடன் வருவதாக” கூறி விட்டு, அந்த கடை ஊழியரை இங்கேயே நிற்கும் படி கூறிவிட்டு, அவர் அங்கிருந்து செல்வது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அப்போது, கடை ஊழியர் சம்மந்தப்பட்ட வீட்டின் அருகில் பணத்தை எதிர்பார்த்து நிற்கும் போது, அந்த கட்டிடத்தின் மற்றொரு வழியாகப் பணம் மற்றும்  பொருட்களுடன் அவர் தலைமறைவாகி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

மேலும், இதே பாணியில் தானே, பால்கர், மும்பை, நாசிக், மற்றும் புனே மாவட்டங்களில் தனது கைவரிசை இவர் தொடர்ந்து காட்டி வந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் இருந்து மோசடி செய்த 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.