கேரளாவில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியின் போஸ்ட் வெட்டிங் ஃபோட்டோ ஷூட் (திருமணத்துக்குப் பின் எடுக்கும் புகைப்படங்கள்) சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களைக் குவித்து வருகின்றது. திருமணம் முடிந்தவுடன் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் உடலில் வெள்ளை போர்வைபோல் மெலிதான உடையை அணிந்துக் கொண்டு தேயிலைத் தோட்டங்களில் கணவருடன் ஓடியாடும் ரொமாண்டிக் போட்டோஸ் இடம்பெற்றிருக்கிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், அந்தப் புகைபடங்களையும், அதன் மையக்கருவையும், அதற்கு போஸ் கொடுத்த சம்பந்தப்பட்ட இணையரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சமூகதளவாசிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அந்த இணையர், ``எங்கள் புகைப்படங்கள், எங்கள் விருப்பம் சார்ந்தது" எனக்கூறி, தங்களது போஸ்ட் வெட்டிங் புகைப்படத்தையும் அது சார்ந்த பதிவையும் நீக்காமல், தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். இந்த இணையரின் பெயர், ஹிருஷி கார்த்திகேயன் - லட்சுமி!

பெரும்பாலும் திருமணத்திற்கு முன்புதான், ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இப்போது போஸ்ட் வெட்டிங் ஃபோட்டோ ஷூட்டும் பிரபலமடைந்து வருகின்றது. அப்படித்தான் கடந்த செப்டம்பர் 16 ல் திருமணம் செய்து கொன்ட இந்த இணையர், போஸ்ட் வெட்டிங் ஷூட்டை செய்துள்ளனர். இவர்களால், ப்ரீ வெட்டிங் ஷூட் எடுக்க முடியாமல் போனதாலேயே, இந்த போஸ்ட் வெட்டிங் ஷூட்டை அவர்கள் எடுத்திருக்கின்றார்கள். 

கடந்த வாரம் கேரளாவின் இடுக்கி மாவட்டம் - வாகமனில் தேனிலைவை கொண்டாடிய இவர்கள், அங்கு தங்கள் நண்பர் அகில் என்பவரின் உதவியோடு இந்த ஃபோட்டோஷூட்டை திட்டமிட்டு எடுத்திருந்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக ஆங்கில இளையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் இந்த இணையர், ``பெரும்பாலான தம்பதிகள், தங்கள் ஃபோட்டோ ஷூட்டில் பாரம்பர்ய உடையான வேஷ்டி சேலை அணிந்து, கோயிலை சுற்றி நடக்கின்றனர். அது மிகவும் டெம்ப்ளேட் ஆகிப் போனதால், நாங்கள் வித்தியாசமாக செய்ய முயற்சித்தோம். அப்படித்தான் இதை செய்தோம்.

இந்த புகைப்படங்களில், ஆடையின்றி போர்வையை போற்றியிருப்பது போல எங்களின் தோற்றங்கள் இருக்கிறது. ஆனால் நாங்கள் ஆடை அணிந்துதான் ஷூட் முழுக்க எடுத்தோம். வாகமன் போன்றதொரு பரபரப்பான சுற்றுலா தளத்தில், ஆடையின்றி ஃபோட்டோ ஷூட் நடத்தப்படுவது எப்படி சாத்தியம்? எங்களை விமர்சிப்பவர்கள், நிதர்சனத்தையும் புரிந்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கின்றனர்.

                                             

இணையரில், கணவர் ஹிருஷி பேசும்போது, ``எங்கள் புகைப்படக்காரரின் கைவணத்தில், படைப்பாற்றலில் இந்தப் புகைப்படங்கள் இப்படி உங்கள் பார்வைக்கு தெரிகின்றது. நிதர்சனம் புரியாமல் சமூக வலைதளத்தில் பலரும் என்னையும் என் மனைவியையும் கடுமையாக விமர்சிக்கின்றனர். எங்கள் வீட்டில் இந்த ஃபொஒட்டோ ஷூட்டுக்கு, யாரும் கவலைப்படவில்லை. இருப்பினும், என் மனைவியின் வீட்டில், வருத்தப்படுகிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

இணையரில் மற்றொருவரான மனைவி லட்சுமி பேசும்போது, ``ஆரம்பத்தில் புகைப்படங்களை பகிர்ந்தபோதே பலரும் எங்களை விமர்சித்தார்கள். அவர்களில் சிலருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் நாளாக நாளாக விமர்சனங்கள் அதிகமாகிவிட்டன. வசைச்சொற்களும் அதிகமாகின. ஆகவே அவற்றை புறக்கணிக்க முடிவு செய்துவிட்டோம். ஒருகட்டத்துக்கு மேல், சமூக வலைதளங்களில் வந்த வசைச்சொற்கள், வாழ்க்கையில் வரத்தொடங்கிவிட்டன. தூரத்து சொந்தக்காரர்கள் தொடங்கி, பக்கத்து வீட்டுக்காரர்கள் வரை, `நான்கு சுவர்களுக்குள் செய்யவேண்டியதை பொதுவெளியில் செய்வதா? நீங்கள் கீழே ஆன்டை அணிந்திருந்தீர்களா?' என்று மிக கீழ்த்தரமாக கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள். இவற்றையெல்லாம் கேட்ட பிறகு, என் பெற்றோர் நெகடிவ் விஷயங்களை புறக்கணிக்க தொடங்கிவிட்டனர். மொத்தத்தில், நாங்கள் யாரும் மோசமான வசைகளுக்கு, விமர்சனங்களும் பதிலளித்து எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்று கூறியிருக்கிறார்.