அரையாண்டுச் சொத்து வரி ரூ.5,000க்குள் செலுத்துவோருக்கான ஊக்கத்தொகையை 10% ஆக அதிகரித்தும், அரையாண்டு முடிந்து சொத்து வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகைக்கான கால அவகாசத்தை 45 நாட்களாக அதிகரித்தும் சென்னை மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க. ஸ்டாலின் இன்று (அக். 17) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :

"ஒவ்வோர் அரையாண்டும் முடிந்து 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை, அப்படிச் செலுத்தத் தவறினால் 16-வது நாளில் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் என்று, சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது, வலது கையால் ஒரு சலுகையைக் கொடுத்துவிட்டு, இடது கையால் அதைப் பறித்துக் கொள்வதுபோல் அமைந்திருக்கிறது.

கரோனா பேரிடர் காலத்தில் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குச் சிரமப்பட்டு, தற்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பலர் வேலையிழப்புகளைச் சந்தித்து, இன்னமும் கூட வேலை கிடைக்காமல், தங்கள் குடும்பத்திற்கு வருமானம் இன்றி வாழ்க்கையை நகர்த்த முடியாமல் தவிக்கிறார்கள்.

சில்லறை வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருப்போர், இன்னும் வருமான ரீதியாக குடும்பச் செலவுகளைக் கூடச் சமாளிக்க இயலாமல் நாள்தோறும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, இதுபோன்ற சூழலில், முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் 15 தேதிக்குள்ளோ, இரண்டாவது அரையாண்டு வரியை அக்டோபர் 1 முதல் 15 தேதிக்குள்ளோ கட்டவில்லை என்றால், அவர்களுக்கு ஊக்கத்தொகை இல்லை என்பதும், அதுமாதிரி செலுத்தத் தவறியவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்பதும், சிறிதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல !

கரோனாவின் காரணமாக, பொருளாதார, வருமானச் சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சென்னை மக்களை, மாநகராட்சி இப்படி மேலும் துயரப்படுத்துவது, எவ்விதத்திலும் சரியல்ல.

எல்லா மட்டத்திலும் டெண்டர் ஊழலில் மக்களின் வரிப்பணம் தண்ணீர் போல் வாரியிறைத்துச் செலவழிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழலின் ஊற்றுக் கண்களில் ஒன்றாக இருக்கும் சென்னை மாநகராட்சி, சொத்து வரி வசூலில் இவ்வளவு கெடுபிடிகள் செய்ய வேண்டியதில்லை.

ஏழை எளிய, நடுத்தர மக்கள் செலுத்தும் சொத்து வரியில், அபராதம் விதிக்கும் கெடுபிடியும், ஊக்கத்தொகை 15 நாட்களுக்கு மட்டுமே அளிப்போம் என்பதும், மக்கள் நலத் திட்டம் அல்ல; மக்களை நச்சரிக்கும் திட்டமே ஆகும்!

எனவே, கரோனா பேரிடர் பாதிப்புகளை மனதில் வைத்து, ஒவ்வொரு அரையாண்டுக்கும் ஊக்கத்தொகை அளிக்க வழங்கப்பட்டிருக்கும் 15 நாட்கள் கால அவகாசத்தை, குறைந்தபட்சம் 45 நாட்களாக உயர்த்தி, அரையாண்டு வரி 5,000 ரூபாய்க்குள் செலுத்துவோருக்கு இந்த ஊக்கத்தொகையை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், தற்போதுள்ள 2 சதவீத அபராதத் தொகையை அரை சதவீதமாகக் குறைத்திட வேண்டும் அல்லது அறவே ரத்து செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.