கடந்த 2017 -ம் ஆண்டு, தொடங்கப்பட்ட யூ-ட்யூப் சேனல், கருப்பர் கூட்டம். முற்போக்கு வீடியோக்களை அடிப்படையாக வைத்து இயங்கி வந்த இந்த சேனலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபாச புராணம் என்றொரு தொடரை வெளியிடத் தொடங்கினர். அதில், சமஸ்கிருத மந்திரங்களின் தூய தமிழாக்கமானது வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொடர் வெளியாகத் தொடங்கிய நாளிலிருந்தே, வலதுசாரிகளின் எதிர்ப்பை தொடர்ச்சியாகப் பெற்று வந்தது. இருப்பினும், எந்த சமரசமும் இல்லாமல் இயங்கினர் கருப்பர் கூட்டக் குழுவினர்.

குறிப்பாக, யூட்யூபர் மாரிதாஸ் வழியாக பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பெற்றுவந்தது கருப்பர் கூட்டம். மாரிதாஸ் சேனலில் சாதிக்கு எதிரான குரலை பதிவு செய்தால், தாங்கள் இந்த தொடரை நிறுத்துவது குறித்து ஆலோசிப்போம் என்று வெளிப்படையாக அறிவித்தனர் கருப்பர் கூட்டக் குழுவினர். மாரிதாஸை போல, வலதுசாரிகள் பலரின் விமர்சனத்தையும், ஒவ்வொரு காலத்திலும் கருப்பர் கூட்டம் பெற்றுக்கொண்டே தான் இருந்தது.

இதற்கிடையில், தங்களின் ஆபாச புராணம் தொடரின் ஒருபகுதியாக `கந்த சஷ்டி கவசம்' குறித்து சமீபத்தில் பேசினர் கருப்பர் கூட்டக் குழுவினர். இங்குதான் வீரியமாகத் தொடங்கியது ஆபாச புராணம் பிரச்னை. இவ்வளவு நாள்கள், வலதுசாரிகளின் பக்கம் மட்டும் இருந்து வந்து கொண்டிருந்த குற்றச்சாட்டுகள், கந்த சஷ்டி கவசம் விவகாரத்துக்குப் பிறகு, ஆன்மிக நம்பிக்கை கொண்டிருக்கும், குறிப்பாகத் தமிழ்த் தேசியவாதிகளிடமும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. ஏனெனில், தமிழகத்தைப் பொறுத்தவரை முருகன், இறைவன் மட்டுமல்ல, அவர் தமிழ்க்கடவுள்!

அந்தவகையில் தமிழ்க்கடவுளை ஆபாசமாக பேசியதற்காக கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் வீடியோ வெளியிட்டதற்கு திரைத்துறை பிரபலங்கள் சிலரும்கூட கண்டனம் தெரிவித்தனர். ஆகவே, விஷயம் இன்னும் இன்னும் பெரிதாகியது. இதற்கிடையில், ஏற்கெனவே இவர்கள் மீது கோபத்திலிருந்த இந்து அமைப்புகள், இப்போது இன்னும் ஆக்ரோஷமாக எழுந்து வந்து, இந்த சேனல் மீது வழக்கத் தொடர்ந்தது. பாஜக உள்ளிட்ட கட்சிகள், இந்த சேனலை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

கந்த சஷ்டி கவசம் பற்றி சர்ச்சையாகப் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிகாரப்பூர்வமாகச் சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

காவல்துறை நடவடிக்கைக்கு இடையில், வீடியோவுக்கு பதிலடி தருகின்றேன் எனக்கூறி, கார்ட்டூனிஸ்ட் வர்மா ஃபேஸ்புக்கில் தகவல் ஒன்றைப் பதிவிட்டார். மேலும் நபிகள் நாயகம் பற்றி கார்ட்டூன் ஒன்றை வெளியிடப்போவதாகவும் அதில் கூறியிருந்தார். பிரச்னை, மதம் சார்ந்து செல்வது சட்ட ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் என நினைத்து, விழுப்புரத்தில் வைத்து கார்ட்டூனிஸ்ட் வர்மாவை போலீஸார் கைது செய்தனர். இந்த கைதுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தன்னுடைய ஃபேஸ்புக்கில், “முருகப்பெருமானின் துதி கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசி விடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் ஹசிப் முகம்மது மீது நடவடிக்கை எடுக்காமல் அதை கண்டித்த கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்துள்ளது அப்பட்டமான இந்து விரோத நடவடிக்கை. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனக்கூறி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரச்னை வேறு கோணத்தில் செல்வதை உணர்ந்த கருப்பர் கூட்டக் குழுவினர், தங்களின் ஃபேஸ்புக் பதிவில், 
``தமிழ் கடவுள் முருகன் பற்றிய ’கந்தசஷ்டி கவசம்’  பற்றிய விளக்க உரைக் காணொளி தமிழக பொதுமக்கள் பலரது மனதைப் புண்படுத்தி உள்ளது என்பதை நேரடியாக நமக்குத் தெரிவித்துள்ளதால்.,அதற்காக கருப்பர் கூட்டம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது. அக்காணொளியை யூ டியூப் தளத்தில் இருந்து நீக்கி உள்ளோம்" எனக்கூறினர்.

மேலும் தங்களின் பதிவில், ``பாசிச பாஜக ஆட்சியில் வட இந்தியாவில் நடந்த பல மதக்கலவரங்களும், பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல்களையும் நாடறியும். தற்போது தமிழகத்திலும் ஊடகத்துறை மீதான இந்துத்துவ கும்பலின் நேரடியான மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் வேலையாகும். இதை சமூகப் பொறுப்புள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்க்க வேண்டும்" எனக்கூறி தங்களுக்கு ஆதரவு கேட்டிருந்தார்கள்.

இருப்பினும், இந்த மன்னிப்பு இன்னமும் பொதுவெளியில் ஏற்கப்படாததாகவே இருக்கின்றது.

திரைப்பிரபலங்கள் பலரும், தங்களுடைய ஆதங்கத்தை இந்த விஷயத்தில் வைத்த வண்ணம் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், `என் ஜபம்.. கந்த ஷஷ்டி கவசம் என்னைக் காக்கும்...என் வாழ்வு அதனால்' என்றார். தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், `அரக்கர் கூட்டத்தையே அலறவிட்டவர் முருகப்பெருமான். கருப்பர் கூட்டம் எம்மாத்திரம்' என்றிருந்தார். நடிகர் பிரசன்னா, `எவரும் எவருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய் பேசப்படும் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரையேன் கேட்பதில்லை இவரையேன் கேட்பதில்லை என்கிற வாதமும் பயன்தராது' எனக்கூறியிருந்தார்.

இந்த ஆதங்க குரல்களுக்கு இடையில், ஒருசிலர், மிரட்டல் தொனியிலும் தங்களுடைய வேதனையை வைக்கிறார்கள். உதாரணத்துக்கு, இயக்குநர் கௌரவ் நாராயணன், `இந்துக்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்க்க வேண்டாம் ஆடிப்போய்விடுவீர்கள். மாதா, பிதா, குரு சரியாக அமையாதவர்களுக்குத் தெய்வத்தைப் பற்றித் தெரியாது' என சாடியிருந்தார். எஸ்.வீ.சேகர், `கந்த சஷ்டி கவசத்தின் மேல கை வைச்சுட்டீங்க... இனி சூரசம்ஹாரத்தை முருகனே செய்வார்' என்று நேரடியாக மிரட்டல் விடுத்தார். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும், தன் பங்கு ஆதங்கத்தை ஆவேசமாக வைத்திருந்தார். பா.ஜ.க பிரமுகர்கள் பலரும், `கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், வதைக்கப்படுவார்கள்' என்று கொலை மிரட்டல் விடுக்கத்தொடங்கினர். பா.ஜ.க சார்பில், அவரவர் வீட்டு வாசலிலேயே தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.

மிரட்டல் ஒருபக்கம், உயர் நீதிமன்றத்தில் முறையீடு ஒருபக்கம் என நீடிப்பதைக் கண்ட கருப்பர் கூட்டம் சுரேந்திரன், உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் இன்று செய்திருந்தார். இவர்தான் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்பு கொண்ட நபர்.

இருந்தும் பிரச்னை ஓயவில்லை. வலதுசாரி சிந்தனையாளர்கள் அனைவரும், இடதுசாரியாளர்களால் தான் இப்படியான சேனல்கள் வளர்கின்றன எனக்கூறி குற்றம் சுமத்தினர். குறிப்பாக தி.மு.க. வின் சார்பில்தான் இப்படியான கடவுள் எதிர்ப்பு பிரச்சாரஙக்ள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினர். இதை எதிர்க்கும் விதமாக, `தி.மு.க. எப்போதும் யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்தும் விதமாகச் செயல்படாது' என,  தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். கே.என்.நேரு தவிர, வேறு எந்த கட்சியினரும் இதுபற்றி பேசவில்லை. அதேபோல, பா.ஜ.கவை தவிர வேறெந்த கட்சியும் இந்தவிவகாரத்தில் இன்னமும் தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. 

மொத்தத்தில், விவகாரம் கருத்துச் சுதந்திரம் என்ற புள்ளியில் தொடங்கப்பட்டு, இன்றைக்கு `மதம் சார்ந்த பாகுபாடுகள்', `இறை நம்பிக்கையை அவமதிப்பது', `கட்சிகளின் நிலைப்பாட்டை நிலைநிறுத்த மேற்கொள்ள எடுக்கப்படும் முன்னெடுப்பு' என எங்கெங்கோ வளர்ந்து நிற்கிறது!

அடுத்து எங்குச் செல்லுமெனப் பொறுத்திருந்து பார்ப்போம்!

- பெ.மதலை ஆரோன்