இந்தியாவில் ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை விடவும் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறதென்றே சொல்ல வேண்டியுள்ளது. அந்த வகையில், நேற்றைய தினமும் இந்தியா புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுயுள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், ஒருநாள் பாதிப்பு 29, 429 என்றாகி, ஒருநாள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி, உச்சத்தை தொட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

இதனால் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,06,752 லிருந்து 9,36,181 என்று உயர்ந்திருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும், 23,727 லிருந்து 24,309 என உயர்ந்துள்ளது. அந்தவகையில் கடந்த 24 மணி  நேரத்தில் 582 பேர் உயிரிழந்து உள்ளனர். 

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,67,665 பேரும், தமிழ்நாட்டில் 1,47,324 பேரும், டெல்லியில் 1,15,346 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு குணமடைபவர்களின் விகிதம் 63.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில், புதிய நோயாளிகள் ஒவ்வொரு நாளும் உயர்வதை போல, குணமாகி வீடுதிரும்புவோர் விகிதமும் இங்கே உயர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது என்கிறார்கள் மத்திய சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள். அந்தவகையில் கடந்த 24 நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 20,572 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில். ஆகவே குணமடைந்தோர் எண்ணிக்கை 5,71,460 லிருந்து 5,92,032 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு வேகம் அதிகரித்துவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பது ஆறுதல் தரும் ஒரு விஷயமாக இருந்துவருகிறது. 

கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணி ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கொரோனாவுக்கான சிகிச்சை மருந்தைக் கண்டறியப்படும் பணிகளும் வேகமாக நடந்துவருகிறது.

கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இருக்கும் எதிர்ப்புரதம் (ஆன்டிபாடி) எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்பதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒருவேளை நீடித்த காலத்துக்கு அது இருந்தால், தடுப்பு மருந்து பணிக்கு ஆகும் காலத்தில் ஏற்படும் தாமதத்தை ஓரளவு கையாள முடியும்.

கொரோனாவால் அதிகம் இறப்பது, முதியவர்களாக இருக்கும் காரணத்தினால், தமிழகம் அவர்கள் மீது தனது கவனத்தை திருப்பியிருக்கிறது. இதுகுறித்து இன்று பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில், நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயம் சார்ந்த நோய்கள் போன்ற நோய்களால் முதியோர் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் வழியாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கடந்த 50 ஆண்டுகளாக பிசிஜி தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் நோய் விகிதமும், உயிரிழப்பு விகிதமும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்கூறிய காரணங்களில் அடிப்படையிலும், கொரோனாவுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையிலும், முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்தி, அதன் செயல்திறனை ஆராய்ச்சி செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தமிழ்நாடு அரசின் அனுமதி கோரியிருந்தது. உடனடியாக வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சோதனை முயற்சியை ஐசிஎம்ஆர், நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் விரைவில் தொடங்க உள்ளது.

முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நோயின் தீவிரத் தன்மையை குறைக்கவும், மருத்துவமனையில் அனுமதி தவிர்க்கவும், உயிரிழப்பை குறைக்கவும் பேருதவியாக அமையும். தமிழக முதல்வரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் தொடர் பணிகள், தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும்" எனக்கூறியிருக்கிறார்.

மேலும் இந்த மருந்தை யாரும் சுயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று பின்னர் எடுத்துக் கொள்ளவும் என்றும் அரசு சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்தாலும்கூட, இப்படியான நடவடிக்கைகள், தமிழகத்தில் குணமாவோர் விகிதத்தையும் அதிகரிக்கின்றது என்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

- ஜெ.நிவேதா