சினிமா ஸ்டைலில் காதலியை பார்க்க பாகிஸ்தான் செல்ல முயன்ற இந்திய காதலன்!
By Aruvi | Galatta | Jul 18, 2020, 01:09 pm
சினிமா ஸ்டைலில் காதலியை பார்க்க பாகிஸ்தான் சென்ற இந்திய காதலன், எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
“காதல் எல்லைகள் கடந்து வரும். அதற்கு மதம், இனம், மொழி பாகுபாடு கிடையாது” என்ற சினிமா வசனங்கள் பேசி நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி அபார சக்தி மிக்க ஒரு காதல், ஒருவனை எவ்வளவு தூரம் அழைத்துச் செல்லும் என்பதற்கு, இந்த ஒரு சம்பவமே உதாரணம்.
காதலுக்காக, நாடு விட்டு நாடு திருட்டுத் தனமாகச் செல்வதை நாம் சினிமாவில் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு சினிமாவும் இந்தியில் வெளியானது. இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாபச்சனின் மகன் அபிஷேக் பச்சன் நடித்த தனது முதல் படமான “அகதிகள்” படத்தில், நாயகன் அபிஷேக் பச்சன், பாகிஸ்தான் பெண்ணான கரீனா கபூரை காதலிப்பார். அந்த காதலுக்காக, நாயகன், குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் எல்லை கடக்க முயல்வார்.
அதே போலவே, இந்திய இளைஞன் ஒருவர், பாகிஸ்தானில் உள்ள தனது காதலியைப் பார்க்க இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லையைக் கடந்து செல்ல முயன்றுள்ளான்.
மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத்தைச் சேர்ந்த 20 வயதான “சித்திக் முகமது ஜிஷன்” என்ற இளைஞன், பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஷா பைசல் நகரில் வசிக்கும் “சம்ரா” என்ற இளம் பெண்ணுடன் பேஸ்புக்கில் நட்பாகி உள்ளார். அதன் பிறகு, அந்த சட்பு காதலாக மாறி உள்ளது. இருவரும் பேஸ்புக்கிலேயே தங்களது காதலைப் பகிர்ந்துகொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து பொது இடங்களும் முடங்கிப்போய் உள்ளன. இதனால், வீட்டில் அமைதியாக இருக்க முடியாமல், காதல் ஏக்கத்தில் சித்திக் தவித்து வந்துள்ளார். இந்த ஊரடங்கையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, தனது காதலியை எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று, சித்திக் திட்டமிட்டான்.
அதன்படி, தனது காதலியை பாகிஸ்தான் சென்று சந்திக்கும் அதிகபட்ச நம்பிக்கையில், மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத்திலிருந்து கிட்டத்தட்ட ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை அடைந்துள்ளார்.
அப்போது, இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ராணுவ வீரர்கள் அசரும் நேரம் பார்த்துச் சித்திக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்திய ராணுவ வீரர்கள் சிறிதும் அசராமல், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இனியும் காத்திருந்தால், நேரம் தான் கடந்து செல்லும் என்று முடிவெடுத்த சித்திக், இந்திய எல்லையை எப்படியும் கடந்து சென்று, பாகிஸ்தான் சென்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதன்படி, சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில், 20 வயது இளைஞன் ஒருவன் வந்துகொண்டிருப்பதை, இந்திய ராணுவ வீரர்கள் பார்த்துள்ளனர். அந்த நேரம் பார்த்து, அந்த இளைஞன், இந்திய எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்குள் செல்ல முயன்றதையும் ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, துரிதமாகச் செயல்பட்டு, அந்த இளைஞனை மடக்கிப் பிடித்து, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த இளைஞன், தன் காதலியைப் பார்க்கப் பாகிஸ்தான் செல்வது தெரிய வந்தது. அத்துடன், தன் காதலியை பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை என்றும், அந்த இளைஞன் கூறி உள்ளான். இதனையடுத்து, எல்லை பாதுகாப்புப் படையினர், அந்த இளைஞனைப் பிடித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சித்திக் கூறியது உண்மைதானா என்று உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், சித்திக் கூறியது அனைத்தும் உண்மை என்பது தெரிய வந்தது.
அதேபோல், முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு இதே போன்று ஒரு இளைஞர், பாகிஸ்தானுக்கு எல்லையைக் கடந்து சென்று உள்ளார். அப்போது, பாகிஸ்தான் போலீசாரால் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு, அடுத்த 6 ஆண்டுகள் கழித்துத் தான், அந்த இளைஞன் விடுதலை செய்யப்பட்டார். தற்போது, சித்திக் ஒரு வேளை இந்திய எல்லையைக் கடந்திருந்தால், இவருக்கும் அதே நிலை தான் ஏற்பட்டிருக்கும் என்றும், ராணுவ உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், ராணுவ வீரர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.