மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது காதலியைக் கொன்று 100 வது நாள் திரைப்படத்தில் வரும் சம்பவம் போல் வீட்டின் சுவருக்குள் மறைத்து வைத்திருந்த காதலனைக் காவல் துறையினர்  கைது செய்து உள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனிதா மோஹிதே, இவர் மகாராஷ்டிராவில் உள்ள மகாராஷ்டிரா தொழில் துறை மேம்பாட்டுக் கழகத்தில் (MIDC) வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது, தன்னுடைய அலுவலகத்தில் பணியாற்றி வந்த 30 வயது மிக்க ஒரு ஆணைக் கடந்த 5 ஆண்டுகளாக அவர் காதலித்து வந்து உள்ளார்.

இந்த நிலையில், “அனிதா மோஹிதே என்பவரை கடந்த அக்டோபர் மாதம் முதல் காணவில்லை” என்று, கூறப்படுகிறது.

அவரது உறவினர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு, அந்த பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்து உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் அனிதா கிடைக்கவில்லை. 

இதற்கிடையில், அனிதா கடைசியாகக் கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதியில், அவரது காதலனுடன் ஷாப்பிங் சென்றதாக அனிதாவின் உறவினர்களுக்குத் தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, அனிதாவின் சகோதரர்கள் அந்த காதலனைத் தேடிப் பார்த்துள்ளனர். அதன்படி, ஒரு வழியாக அந்த காதலனை கண்டுபிடித்த உறவினர்கள், “அனிதா எங்கே” என்று கேட்டுள்ளனர். அவர் குஜராத்தில் உள்ள வாபி எனும் இடத்தில் வசித்து வருவதாக அவர் அப்போது கூறியுள்ளார்.

மேலும், அனிதாவின் உறவினர்களை நம்ப வைப்பதற்காக அனிதாவின் சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி, அவர் குஜராத்தில் இருப்பதற்கான சூழலை ஏற்படுத்தி நாடகமாடி வந்துள்ளார். 

அதே நேரத்தில், “இப்போதும் தன்னுடன் மட்டும் அனிதா தொடர்பில் இருக்கிறார்” என்றும், அவர் கூறி சாட்டிங் செய்துள்ளதை ஆதாரமாகக் காண்பித்து உள்ளார்.

ஆனால், அனிதாவின் உறவினர்களுக்கு அவன் சொல்வதில் உடன் பாடில்லாமல் போகவே, தொடர்ந்து அனிதாவைப் பற்றி விசாரித்து வந்துள்ளனர். அப்போது, அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்துள்ளார். 

இதனால், சந்தேகம் வலுத்திடவே அனிதாவின் சகோதரர்கள் அவனைப்பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர், அவனை தங்கள் பாணியில் விசாரித்த போது தான், இந்த முழு உண்மையும் வெளிவந்ததுள்ளது. 

அதாவது,  “அவன், கடந்த 5 வருடமாக அனிதாவைக் காதலிப்பதாகவும், தொடர்ந்து அவரிடமிருந்து பணத்தை வாங்கி தனது தேவைகளை நிறைவேற்றி சுகவாசியாகச் செலவு செய்து வந்து உள்ளார். அப்போது, அனிதா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அவன், அனிதாவை தனது வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்து கொலை செய்து உள்ளான்.

அதன் பிறகு, அனிதாவின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல், “100 வது நாள்” திரைப்படத்தில் வரும் சம்பவத்தைப் போலவே, அதே வீட்டின் சுவருக்குள் சிமெண்ட் கலவை வைத்துப் பூசி மறைத்து வைத்துள்ளார். 

அதோடு "அனிதாவின் உடல் இருந்த அதே வீட்டில் கடந்த 3 மாதமாகத் தொடர்ந்து அவன் வசித்து வந்து உள்ளான்.
இந்நிலையில், அவனைக் கைது செய்த காவல் துறையினர், அவன் மீது இந்தியத் தண்டனை சட்டம் 363, 302 மற்றும் 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அனிதாவின் உடல் எலும்புக்கூடாக மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.