உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், அயோத்தியில் அமைய இருக்கும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கான நன்கொடையாக 2 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.


ராமர் கோயிலுக்கு கடந்த  ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த கோயில் 2025ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிக்கு தேவையான நிதியை சேகரிக்கும் பணியை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகித்து வருகிறது. பொதுமக்களிடம் நிதி திரட்டி ராமர் கோயில் கட்ட, இந்த அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.


இந்நிலையில் , முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பங்களிப்பாக  2 லட்சம் ரூபாய் காசோலையை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். மேலும் முன்னதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 5,00,100 நன்கொடையாக அளித்திருந்தார். 


மேலும் உத்தரப் பிரதேசத்தின் தேஸ்கான் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சுரேந்திர பகதூர் சிங், தனது பங்களிப்பாக ஒரு கோடியே, 11 லட்சத்து, 11 ஆயிரத்து 111 ரூபாய்க்கான காசோலையை வழங்கி உள்ளார்.