கடந்த 2017-ம் ஆண்டு மேயாத மான் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாய் திரைக்கு வந்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார். 

மாஸ்டர் திரைப்பட அனுபவம் பற்றியும், தளபதி விஜய் பற்றியும் சூப்பரான ஒரு விஷயத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் கூறியிருப்பதாவது, 2019-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி என் வாழ்வில் மறக்க முடியாத நாள். என் பிறந்தநாளில் தளபதி விஜய் எனக்கு தொலைபேசி வாயிலாக அழைத்த நாள். 

தொலைபேசியில் லோகேஷ் கனகராஜ் குரலில் பேசி மிமிக்ரி செய்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார். டெல்லி ஷூட்டிங்கிற்கு அழைத்து சர்ப்ரைஸாக கேக் வெட்டினார். லவ் யு விஜய் அண்ணா. அன்றும், இன்றும், என்றும் பல கோடி இதயங்களின் மாஸ்டர் என்று புகழாரம் சூட்டி பதிவு செய்துள்ளார் ரத்ன குமார். 

தளபதி விஜய் நடிப்பில் ஜனவரி 13-ம் தேதி பொங்கல் சிறப்பாய் வெளியான திரைப்படம் மாஸ்டர். மாளவிகா மோஹனன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மகேந்திரன், கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றது இப்படம். 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், தமிழகத்தில் சுமார் 90% திரையரங்குகளில் மாஸ்டர் வெளியானது. நீண்ட நாட்கள் கழித்து பெரிய நடிகரின் படம் என்பதால், ரசிகர்களும் திரையரங்குகளுக்குப் படையெடுத்தார்கள். 

அனைத்துத் திரையரங்குகளுமே நிரம்பி வழிந்தன. சில திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு டிக்கெட் கொடுத்த காட்சியும் அரங்கேறியது. தமிழகத்தில் முதல் நாளில் மாஸ்டர் திரைப்படம் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 2-ம் நாள் வசூல் சேர்த்து 40 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாகப் படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள். இந்த வார இறுதி நாட்களைக் கணக்கில் கொண்டால், 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.