மும்பையில் நாயை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது, கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த 22 ஆம் தேதி மும்பையில் உள்ள போவாய் பகுதியில் உள்ள கேலரியா மால் அருகே ஒன்பது வயது மதிக்கத்தக்க நாய் ஒன்று, பெருமளவில் ரத்தப் போக்குடன் இருப்பதை, அந்த பகுதியைச் சேர்ந்த 2 பெண்கள் பார்த்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த இரு பெண்களும், நாய்க்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். இருப்பினும் அந்த நாயின் பிறப்புறுப்பு பகுதியில் இருந்து ரத்தப்போக்கு தொடர்ந்துக்கொண்டே இருந்து உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் நாய்களுக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவரிடம் பாதிக்கப்பட்ட நாயைக் கொண்டு சென்று உள்ளனர். அங்கு, நாயைப் பரிசோதித்த மருத்துவர், நாயின் பிறப்புறுப்பின் பாகங்களில் குச்சி ஒன்று செருகப்பபட்டிருப்பதை கண்டு பிடித்தார்.

இதனைத்தொடர்ந்து, அந்த நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதை மருத்துவர் உறுதிச் செய்துகொண்டு, அந்த இரு பெண்களிடமும் தெரிவித்தார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 கீழ் இயற்கைக்கு மாறான பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன், இது தொடர்பாக போலீசார், நாயை பாலியல் வன்கொடுமை செய்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நிலையில், தற்போது, அந்த காம வெறியை சில வெறிப்பிடித்த மிருகங்கள் வாய் இல்லாத ஜீவனான நாயை கூட விட்டு வைக்காமல், பாலியல் வன்கொடுமை செய்து, இன்புற்றுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

அதே போல், நாய்கள் தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி போன்ற மதிப்புமிக்க நிறுவனத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலைச் சேர்ந்த காருண்யா என்கிற அறக்கட்டளைக்கு, ஐ.ஐ.டி வளாகத்திற்குள் சிறிய இடம் ஒன்றை ஒதுக்கி கொடுத்து, வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த நாய்களை பிடித்து அங்கு ஒரே கூடாரத்தில் அடைத்து வைத்து பராமரிக்க அனுமதி வழங்கி இருந்தது. 

அப்படி, வளாகத்திற்குள் பிடிக்கப்படும் நாய்களுக்கு இனப் பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வளாகத்திற்கு வெளியே வேறு இடங்களில் நாய்கள் விடப் படுவதாகவும் வளாகத்தில் உள்ள பூனை, நாய்களுக்கு யாரையும் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் தற்போது இந்திய விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, சென்னை ஐஐடி மீது வைக்கப்பட்ட புகார் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர், தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய செயலர் உறுப்பினர், மாநகர காவல் ஆணையாளர், இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்புனர் அஞ்சலி மேனன் ஆகியோர் கொண்ட குழு ஐஐடியில் நேரில் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. 

நாய்களை ஒரே இடத்தில் அடைப்பது விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு விதிகள் 2001 க்கு எதிரானதாகும். ஐ.ஐ.டி போன்ற மதிப்பு மிக்க அமைப்பு விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மீற கூடாது என இந்திய விலங்குகள் நல வாரியம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.