பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இரண்டு நாள் மேற்கு வங்காள மற்றும் சிக்கிம் பயணத்தின் ஒரு பகுதியாக, டார்ஜிலிங்கில் உள்ள சுக்னாவில் உள்ள 33 படைப்பிரிவுகளின் தலைமையகத்தை சமீபத்தில் பார்வையிட்டார். அதன் பின், கிழக்கு செக்டர்களில் தற்போதைய சூழ்நிலை மற்றும் தயார் நிலையை ஆய்வு செய்தார்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவுச்சின்னத்தில் சாஸ்திரா பூஜை செய்தார். இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவணே கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்போது டாவோர் தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்ட போர்த்தளவாடங்களை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

இன்றைய தினம், நவராத்திரி பண்டிகையைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாகனங்களையும், தொழில் கருவிகளையும் சுத்தம் செய்து பூஜை செய்கின்றனர். அலுவலகங்கள் அனைத்திலும் சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 

அவ்வகையில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் பல்வேறு ராணுவ தளவாடங்களுக்கு சிறப்பு பூஜை செய்தார். 

சாஸ்திரா பூஜைக்குப் பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊடகங்களிடம் கூறியதாவது:

இந்தோ-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வந்து அமைதி காக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் விருப்பம். இது நமது குறிக்கோளும்கூட, ஆனால் சில நேரங்களில், தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. ஆனால், நம்நாட்டின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட எவரையும் எடுக்க எங்கள் ராணுவம் அனுமதிக்காது என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

அண்மையில் லடாக்கில் இந்தோ-சீனா எல்லையில் என்ன நடந்திருந்தாலும், நமது ஜவான்கள் தைரியமாக பதிலடி கொடுத்த விதம், அவர்கள் வீரம் பொன்எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் லடாக் முதல் வடகிழக்கில் அருணாச்சல பிரதேசம் வரை இந்தியாவும் சீனாவும் மோதலில் ஈடுபட்டுள்ளன. பாங்கொங் ஏரி மற்றும் பிற அருகிலுள்ள இடங்களில் உள்ள இந்தியப் பகுதிகளுக்குள் சீன ராணுவம் நுழைந்தது. தனது துருப்புக்களை நகர்த்தி படையெடுக்க முயன்ற சீன ராணுவத்தை எதிர்ப்பதற்காக இந்தியா 60,00 வீரர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பக்கம், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜை திருநாளையும், அதற்கடுத்த பத்தாவது நாளில் விஜயதசமி திருநாளையும் பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல், செல்வம் மற்றும் கல்வி ஆகியவை இன்றியமையாதது ஆகும். மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் ஆற்றலில் மிகுந்து, செல்வத்தில் சிறந்து, கல்வியில் உயர்ந்து விளங்கிட மலைமகளையும், திருமகளையும், கலைமகளையும் போற்றி வணங்குவது நவராத்திரி பண்டிகையின் சிறப்பாகும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று மதித்து, தொழிலின் மேன்மையை போற்றும் வகையில், மக்கள் தங்களது தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளை பூஜைக்குரிய பொருட்களாக வைத்து, மேன்மேலும் தொழில் வளர இறைவனை வேண்டி வழிபட்டு ஆயுத பூஜை திருநாளை கொண்டாடுவார்கள்.

விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், மக்கள் இறைவனை வணங்கி, கல்வி, கலை, தொழில் போன்ற நற்காரியங்களை தொடங்கி வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளை கொண்டாடுவார்கள். இந்த சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட உள்ளதையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.