மற்ற நாடுகளை விடவும் இந்தியாவில் தான் விவாகரத்து குறைவாக நடைப்பெறுகிறது. இந்தியர்கள் திருமணத்தை மதத்தோடும் கலாசாரத்தோடும் தொடர்புபடுத்துவதால், நூற்றுக்கு ஒன்று மட்டுமே தோல்வியடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.


திருமண வாழ்வு தோல்வியுறும் போது , அதிலிருந்து வெளிவர நினைப்பது தவறானதல்ல. ஆனால், எந்தெந்தக் காரணத்துக்காக விவாகரத்துப் பெறுவது சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறது என்பது குறித்த விரிவான புரிதல் மற்றும் சட்ட தெளிவு இந்தியாவில் குறைவாக உள்ளது. முத்தலாக் தடை மற்றும் தொழுநோய் உள்ளவர்களை விவாகரத்து செய்யத் தடை என்று புதிய சட்டத் திருத்தங்களை மத்திய அரசு தொடர்ந்து செய்துக் கொண்டு வருகிறது. 

இந்நிலையில்  மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில்,'விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் வழங்கும் விவாகரத்தில் மதரீதியிலான சட்டங்களாக இல்லாமல், பொதுவான ஒரே மாதிரியான சட்டங்களாக மாற்றியமைக்க வேண்டும் ‘’ என்று பொதுநல வழக்கை தொடர்ந்து இருந்தார். 


இந்த வழக்கை ஏற்ற உச்சநீதிமன்றம், ‘’ இந்த விவகாரத்தில் நீதிமன்றம் விரைவில் ஒரு முடிவை மேற்கொள்ளும் . மேலும்  இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒருசில கருத்துக்களை கேட்க வேண்டியுள்ளதால் பதிலளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்படுகிறது’’ என்று தெரிவித்து இருக்கிறது.