டெல்லி எல்லையின் தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சாப், ஹரியானாவிலிருந்து டெல்லி வரை பேரணியாகச் சென்று மழை, குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடிவருகின்றார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக  புதிய விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்பினர் கண்டனக் குரல்களை எழுப்பிவருகின்றனர். 


டிசம்பர் மாதம்  5-ம் தேதிக்குள் மத்திய அரசு  புதிய விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். அப்படித் திரும்பப் பெறா விட்டால், தங்களுக்கு அளிக்கப்பட்ட பதக்கங்களையும் விருதுகளையும் திருப்பியளிக்கத் திட்டமிட்டிருப்பதாக பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் தெரிவித்திதார்கள்.  


இந்நிலையில் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், ஷிரோமணி அகாலி தளத்தின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல்  கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது  பா.ஜ.க உடனான கூட்டணியையும்  முறித்துக்கொண்டது.

அதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் , ’’மத்திய அரசு, விவசாயிகளுக்கு  துரோகம் இழைத்துவிட்டது. அதனால்,  2015-ம் ஆண்டு மத்திய அரசு, தனக்கு வழங்கிய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதைத் திருப்பிக்கிறேன் ‘’ என அறிவித்திருக்கிறார். 


மேலும் பஞ்சாப் மாநில ராஜ்ய சபா எம்.பி-யான சுக்தேவ் சிங்கும்  தனது பத்ம பூஷண் விருதை மத்திய அரசுக்கு திருப்பி அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டு வீரரான சஜ்ஜன் சிங் சீமா தான் பெற்ற அர்ஜுனா விருதையும் திருப்பியளித்திருக்கிறார். 


இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ , இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் வருத்தமளிக்கிறது என்றிருந்தார். அதை கண்டிக்கு விதமாக, ‘’ ஜஸ்டின் ட்ரூவோவின் கருத்து தேவையற்றது. ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது சரியில்லை  என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கருத்து தெரிவித்திருக்கிறார்.