3 கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்து நடந்த திருமணத்தில் முதலிரவின் போது குடிபோதையில் வந்த கணவன், மனைவியை அடித்து துன்புறுத்தியதால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு எச்.ஏ.எல். அருகே இருக்கும் லால்பகதூர் சாஸ்திரி நகரை சேர்ந்த பரத், பொறியாளராக பணியாற்றி வருகிறார். 

இப்படிப்பட்ட சூழலில், பொறியாளர் பரத்திற்கும், அங்குள்ள ஒரு தொழில் அதிபரின் மகளான ஸ்ராவனிக்கும் இடையே, திருமணம் செய்து வைக்க இரு வீட்டு 
குடும்பத்தினர்களும், உறவினர்களும் பேசி முடிவு செய்திருந்தனர். 

அதன் படி, சொந்த பந்தங்கள் சூழ கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள திருமண மண்டபத்தில் பரத் - ஸ்ராவனிக்கு திருமணம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக மணப்பெண் ஸ்ராவனியின் குடும்பத்தினர், மாப்பிள்ளை பரத்திற்குப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு சொகுசு கார், 5 கிலோ தங்க நகைகள், 5 லட்சத்திற்கு ஒரு வைர மோதிரத்தையும் வரதட்சணையாகக் கொடுத்திருந்தனர்.

இப்படியாக, ஒட்டு மொத்தமாக 3 கோடி ரூபாய்க்கு மேல் பெண் வீட்டார் சார்பில் வரதட்சணை கொடுத்ததுடன், பல லட்சம் ரூபாய் செலவு செய்து தனது மகள் 
ஸ்ராவனியின் திருமணத்தை, அவரது தந்தை நடத்தி நடத்தி முடித்திருக்கிறார். 

ஆனால், திருமணம் முடிந்த அன்றைய தினத்திலேயே அதுவும் முதலிரவு அன்றே மது அருந்திவிட்டு குடிபோதையில் மாப்பிள்ளை பரத், தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதை பார்த்து புதுப்பெண் ஸ்ராவனி, கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார். 

அதன் பின்னர், குடிபோதையில் இருந்த பரத், தனது மனைவி ஸ்ராவனியிடம் நிதானம் இல்லாமல் பேசி உள்ளார். ஆனால், கணவன் குடிபோதையில் இருந்ததால் பரத்திடம் அவர் மனைவி பேச மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பரத், முதலிரவு அன்றே தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், சமாதானப்படுத்தி முதலிரவை, மறு நாள் நடத்த முடிவு செய்ததாகத் தெரிகிறது. ஆனால், மறுநாள் மட்டுமின்றி கடந்த ஒரு மாதமாக வீட்டுக்கு வராமல் மது அருந்திவிட்டு பரத் சுற்றி திரிந்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன், குடிபோதையில் இரவில் வீட்டுக்கு வந்து ஸ்ராவனியை அடித்து, உதைத்துத் துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு பரத்தின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படியே, கணவரின் தொல்லையைக் கடந்த ஒரு மாதம் பொறுத்திருந்த புதுப்பெண் ஸ்ராவனி, நடந்த சம்பவங்கள் குறித்து தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். அதன் பின்னர், அங்குள்ள எச்.ஏ.எல். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அத்துடன், குடிபோதையில் மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகப் பரத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் பரத்திற்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், அதனை மறைத்து தன்னை 2 வது திருமணம் செய்திருப்பதாகவும், பரத் பொறியாளர் இல்லை என்றும், அவர் எஸ்.எஸ்.எல்.சி. தான் படித்திருப்பதாகவும் புதுப்பெண் ஸ்ராவனி பகிரங்கமாகக் குற்றச்சாட்டி உள்ளார். 

மேலும், பரத்திடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கான நடவடிக்கையையும் புதுப்பெண் ஸ்ராவனி எடுத்து வருகிறார். இதனால், பெங்களூருவில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.