உண்ணும் உணவில் செய்யப்படும் கலப்படம் என்பது, இன்றைய சூழலில் அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இதுகுறித்த விழிப்புஉணர்வுகளை வல்லுநர்கள் அதிகப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். இருப்பினும், கார்ப்பரேட் நிறுவனங்களில் கலப்பட போக்கு மட்டும் மாறவேயில்லை.

அதனொரு பகுதியாக, தேனில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்த கலப்படம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுத்தமான தேன் என்ற முத்திரையப் பெற வேண்டும் என்றால், 18 வித பரிசோதனைகளுக்கு அந்த தேன் உள்ளாக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் விற்பனையில் உள்ள 13 முன்னணி நிறுவனங்களில், 10 நிறுவனங்கள் இந்த 18 வகை சோதனைகளில், தோல்வியை கண்டுள்ளன.

இப்படி பரிசோதனைகளில் தோல்விகண்ட பல முன்னணி தேன் உற்பத்தி நிறுவனங்கள், தங்களது நிறுவன வளர்ச்சிக்காக சிந்தெடிக் சுகர் எனப்படும் ஒரு சர்க்கரைப் பாகை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய தேன் பரிசோதனையில், தோல்வி கண்ட தேன் நிறுவனங்களின் உற்பத்தி குறித்த விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் மிகவும் புகழ்பெற்ற தேன் உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தேன் மற்றும் கச்சா தேன் ஆகியவற்றை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சோதனைக்கு எடுத்துக் கொண்டது. இந்தியாவில் உள்ள பரிசோதனை மையங்களில் நடத்தப்படும் பெரும்பாலான சோதனைகளில் தேன் நிறுவனங்கள் வெற்றி பெற்றாலும், ஒரே ஒரு சோதனையில் - அதன் ஆய்வகம் ஜெர்மனியில்தான் உள்ளது - சோதனைக்கு உள்படுத்தப்பட்ட 13 தேன் நிறுவனங்களில் வெறும் 3 நிறுவனங்கள் மட்டுமே வெற்றி கண்டன. 

பொதுவாக இந்தியாவில் சுத்தமான தேன் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய இந்த பரிசோதனை தேவையில்லை என்றாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நிச்சயம் இந்த சோதனையில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சட்டத்துக்கு தேவையில்லை என்ற போதிலும், தேனில் கலப்படம் செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உணவு பாதுகாப்பு மற்றும் நச்சுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனைக்காக, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் உணவு ஆய்வாளர்கள் இந்திய நிறுவனங்களான டாபர், பதஞ்சலி, பைத்யநாத், ஜண்டு உள்ளிட்ட 13 நிறுவனங்களின் மூல மற்றும் பதப்படுத்தப்பட்ட தேனை எடுத்து பரிசோதனை மேற்கொண்டனர். அதன் முடிவில், 13 பிராண்டுகளில் 3 பிராண்டுகள் மட்டுமே சுத்தமான தேன் என தேர்வாகியுள்ளன.

தேன் கலப்படத்தைக் கண்டறியும் சில முறைகள்!

* சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விட்டால், தண்ணீரில் கரையாமல் கீழே சென்று தங்கினால், அது சுத்தமான தேன்.
* சுத்தமான காட்டன் துணியைத் தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பித்தால், நன்றாகச் சுடர்விட்டு பற்றி எரியும். அப்படி எரிந்தால் அது சுத்தமான தேன். 
* சுத்தமான தேனை வாணலியில் சூடு செய்தாலும் அதன் அடர்த்தி குறையாது. 
* சுத்தமான தேனை கண்ணாடி பாட்டிலில் வைத்திருக்கும்போது அடர்த்தி ஒரே சீராக இருப்பதுடன், நிழல் போன்ற அடுக்குப் படலம் ஏற்படாது. தேனின் நிறம் ஒரே சீராக இருக்கும். 
* சுத்தமான தேனுக்கு அடர்த்தி அதிகம். அதை ஸ்பூனில் எடுத்து கிண்ணத்தில் விட்டால், மெல்லிய நூல் இழை போல் இறங்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன், சொட்டு சொட்டாக வடியும். 
* சுத்தமான தேனை ஒரு பாத்திரத்தில் இருந்து  மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றினால், அதன் அடர்த்தி காரணமாக  உடனே ஒட்டாமல் குமிழ் போலப் பரவி, பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப தேன் சம நிலை பெற சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். கலப்படம் மிகுந்த தேனை பாத்திரத்தில் ஊற்றினால், உடனேயே தண்ணீர் போலப் பாத்திரத்தில்  சமநிலையில் இருக்கும். இது போன்று பல்வேறு வழிமுறைகளில் கலப்படத்தை கண்டறியலாம்