மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி, விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டுத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது வரை பல கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தியும், இது வரை எந்த ஒரு சுமுக முடிவும் எட்டப்படவிட வில்லை. 

ஆனாலும், டெல்லியில் நிலவும் உயிரையே உரைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏழை விவசாயிகள் தங்களது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அதே நேரத்தில், 3 வேளாண் சீர்திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில், தங்களது போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து அதில் உறுதியாகவும் இருந்து வருகின்றனர்.

குறிப்பாக, “தங்களது கோரிக்கையில் சமரசம் செய்ய முடியாது என்றும், காந்தி ஜெயந்தியான வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும்”  விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் தெரிவித்தார்.

அத்துடன், “அக்டோபர் 2 ஆம் தேதிக்குப் பிறகு, நாங்கள் மேலும் திட்டமிடல் செய்வோம் என்றும், அரசாங்கம் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் அழுத்தம் கொடுக்க மாட்டோம்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத், “விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், மத்திய அரசை அமைதியாக இருக்க வேளாண் அமைப்புகள் விடக் கூடாது என்றும், 40 லட்சம் டிராக்டர்களை கொண்டு இம்முறை பேரணி நடத்தப்படும் என்றும், இந்த பேரணியில், நாடு முழுவதும் ஆதரவைப் பெறுவதற்காக 40 தலைவர்களும் நாமு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்” என்றும், தெரிவித்தார்.

முக்கியமாக, “நாட்டின் எதிர் காலம் பற்றி விவசாயிகள் இனி முடிவு செய்வார்கள்” என்றும், அவர் ஆவேசமாகப் பேசினார். 

இதனையடுத்து, “உரிமைக்காகப் போராட்டம் நடத்தும் விவசாயிகளை, தேச விரோதி என மத்திய அரசு கூறுகிறது என்றும், ஆனால் மத்திய அரசு தான் தேசத்திற்கு எதிராகச் செயல்படுகிறது” என்றும், பிரியங்கா காந்தி மிக கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், பிரதமர் மோடி தனது நாடாளுமன்ற உரையின் போது விவசாயிகளை குறிப்பிட்டு, “அந்தோலன் ஜீவி” என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இந்த வார்த்தையை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தனர். இது தொடர்பாக பேசிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “விவசாயிகளை போராடி பிழைப்பவர்கள் என சொல்லி பிரதமர் நரேந்திர மோடி கொச்சைப்படுத்தலாமா?” என்று, கேள்வி எழுப்பினார். இப்படியாக, விவசாயிகள் பிரச்சனை பெரும் பிரழயத்தை உண்டாக்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், இதற்கு இன்னும் தீர்வு கிட்டவில்லை.

இதனால், விவசாயிகள் தங்களது அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். அந்த வகையில் இன்று பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் சுமார் 4 மணி நேர ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்து உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் முழு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை உறுதி செய்ய ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

மிக முக்கியமாக, விவசாயிகளின் ரயில் மறியல் பேராட்டத்தை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு மூச்சில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் ரயில் பாதுகாப்புக்காக கூடுதலான படைகள் குவிக்கப்பட்டு உள்ளன.

இதனிடையே, வேளாண் சட்டப் போராட்டத்திற்குப் பின் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி அங்கு அமோகமாக வெற்றிப் பெற்று உள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் 7 மாநகராட்சிகளையும் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.