பிரபல மலையாள நடிகை அம்பிலி தேவி, “எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக” பரபரப்பான குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

மலையாள திரையுலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வரும் அம்பிலி தேவி, சுமதி ராம் இயக்கிய “விஸ்வதுளசி” படத்தில் இளம் வயது நந்திதா தாஸாக நடித்திருக்கிறார். 

“விஸ்வதுளசி” படத்தைத் தொடர்ந்து, மலையாளத்தில் பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து இருக்கிறார். 

அத்துடன், சினிமாவில் வாய்ப்புகள் சற்று குறைந்த நிலையில், மலையாள டிவி தொடர்களிலும் அவர் தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார். 

சினிமாவில் நடிக்கும் போதே, நடிகை அம்பிலி தேவி, ஒளிப்பதிவாளர் லோவல் என்பவரைத் திருமணம் செய்து இருந்தார். திருமணத்திற்குப் பிறகு, கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், பின்னர் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் தான் நடிகை அம்பிலி தேவியும், பிரபல மலையாள சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயன் என்பவரும் காதலித்து வந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்தனர். மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களுக்குத் திருமண வாழ்க்கைக்குப் பரிசாக ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.

ஆனால், அதன் தொடர்ச்சியாக நடிகை அம்பிலி தேவிக்கும், நடிகர் ஆதித்யன் ஜெயனுக்கும் அடுத்தடுத்து கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு உள்ளதாகவும் இருவரும் விரைவிலேயே விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் தான், கடந்த 2 மாதத்துக்கு முன்பு, குடும்ப வன்முறை புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தார் நடிகை அம்பிலி தேவி. 

அதில், “எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும்” அவர் பகிரங்கமாகக் குற்றச்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், நடிகை அம்பிலி தேவி, கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாவரா காவல் நிலையத்தில், கணவரும் நடிகருமான ஆதித்யன் ஜெயன் மீது மீண்டும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

அந்த புகாரின் படி, குடும்ப வன்முறை தொடர்பான பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நடிகர் ஆதித்யன் ஜெயனை அதிரடியாகக் கைது செய்தனர். 

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம், மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.