3 பெண்கள் போலீஸ் போல் வேடமணிந்து முதியவரை நிர்வாணப் படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஹரியானா மாநிலம் யமுனா நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட புது ஹமிதா என்னும் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். 

ஆனால், இந்த முதியவரின் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த முதியவரின் மகள் திருமணம் ஆன நிலையில், அவரது கணவருடன் சென்று விட்டார்.

அப்போது, முதியவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததால், அவரை மிரட்டி பணம் பறிக்க அந்த பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் சேர்ந்து திட்டம் போட்டு உள்ளனர்.

திட்டமிட்டபடி, அந்த பெண்கள் 3 பேரும் போலீஸ் உடை அணிந்து, அந்த முதியவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, 3 பெண்கள் அவரை மிரட்டி உள்ளனர்.

அத்துடன், அந்த முதியவரை ஆடைகளைக் கழற்றும்படி அந்த பெண்கள் மிரட்டிய நிலையில், இதற்குப் பயந்து போன அந்த முதியவர் தனது ஆடைகளை மிரட்டி உள்ளார். இதனையடுத்து, அந்த முதியவரை நிர்வாணமாக வீடியோ எடுத்த அந்த பெண்கள், பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

“பணம் தரவில்லை என்றால் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவோம்” என்று, அந்த 3 பெண்களும் அவரை கடுமையாக மிரட்டிப் பயமுறுத்தி உள்ளனர்.

குறிப்பாக, 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு அந்த பெண்கள் மிரட்டி உள்ளனர்.

இதனால், பயந்து போன அந்த முதியவர் முதல்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்ததால், வேறு வழியில்லாமல் அங்குள்ள யமுனா நகர் காவல் நிலையத்தில் அந்த முதியவர் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றச் செயலில் ஈடுபட்ட 3 பெண்களையும் அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், “வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவர் வீட்டில், போலீஸ் உடையில் முதலில் ஒரு பெண் வந்திருக்கிறார். இதனையடுத்து அடுத்த 5 நிமிடத்தில் 2 பெண்கள் வந்து தங்களை போலீசார் என கூறி, முதியவரின் ஆடையைக் களையச் சொல்லி மிரட்டி பணம் பறித்துள்ளதும்” தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த 3 பெண்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.