சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த இளைஞரை, மரத்தில் கட்டிவைத்து உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான அமிங்கா பிரசாத் பட்டேல் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், அவரை அசிங்கமான முறையில் புகைப்படமும் எடுத்து வைத்துக்கொண்டு, மிரட்டி உள்ளார்.

 UP Man Tree burnt alive for harassing girl

இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை ஹரிசங்கர், அங்குள்ள காவல் நிலையில்  அமிங்கா பிரசாத் பட்டேல் மீது புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அந்த இளைஞர் அந்த சிறுமி வீடு இருக்கும் பகுதியில் மிகவும் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதாகவும் கூறப்பட்ட நிலையில், சிறுமியின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்ததாகவும் கூறப்பட்டது.

 UP Man Tree burnt alive for harassing girl

இதனால், கடும் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை ஹரிசங்கர் உள்ளிட்ட அவரது உறவினர்கள், அமிங்கா பிரசாத் பட்டேலைப் பிடித்து, அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் கட்டி கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதனையடுத்து, அந்த இளைஞரை உயிருடன் எரித்துக்கொன்றுள்ளனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், அந்த பகுதி மக்களைத் தாக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், போலீசாரின் 2 வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

இதனையடுத்து, அந்த பகுதியில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், இளைஞரை தீ வைத்து எரித்துக்கொன்றதற்காக, சிறுமியின் தந்தை ஹரிசங்கர் மற்றும் சுபம் ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், அந்த பகுதி முழுவதும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.