சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்திலிருந்து, தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை முதல் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். 

CM Palanisamy Provided Kapasura drinking water to police

அப்போது, தமிழகத்தில் மேலும் சில தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கொரோனாவை தடுக்க சித்த மருத்துவத்தில் தடுப்பு மருந்துகள் இருக்கிறதா? என்பது குறித்து, சித்த மருத்துவர்களுடன் முதலமைச்சர் 

பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்புக்குப் பாரம்பரிய மருத்துவத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆலோசனைக்குப் பின், சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

CM Palanisamy Provided Kapasura drinking water to police

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனாவுக்கு எதிரான பணியில் மருத்துவர்களின் சேவை மகத்தானது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “மருத்துவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும்” முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கைத் தெரிவித்தார்.

அத்துடன், “மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் ‘ஆரோக்கியம்’ திட்டம் தொடக்கப்பட்டுள்ளதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சிகிச்சை பெற்ற பின் மக்கள் உடல் நலத்தைப் பேண ஆரோக்கியம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும்” முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

குறிப்பாக, “கொரோனாவை தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம் என்றும், நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான மருந்து அல்ல; அது எதிர்ப்பு சதிக்காக மட்டுமே வழங்கப்படுகிறது” என்றும் குறிப்பிட்டார். 

அதேபோல், “சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணப்பொட்டலங்கள் வழங்கப்படும்” என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம்” என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.