பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (நவம்பர் 21) சென்னை வந்திருந்தார். டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள் பாஜக மூத்த, முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்ல அமித்ஷா காரில் புறப்பட்டார். 

அங்கு சாலையின் இரு புறமும் நின்ற அதிமுக, பாஜக தொண்டர்கள் அமித்ஷாவை வரவேற்று கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய அமித்ஷா, சிறிது தூரத்திற்கு நடந்தே சென்றார். சாலையில் உள்ள தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு அவர்களின் வரவேற்பை அமித்ஷா ஏற்றுக்கொண்டார். 

இதனையடுத்து காரில் ஏறி புறப்பட்டுச் சென்ற அமித்ஷா சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு தங்கி ஓய்வெடுத்த பின்னர், இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இதைத் தொடர்ந்து அமித்ஷா தங்கியுள்ள ஓட்டலுக்குச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் அவரை நேரில் சந்தித்து பேசினார்.

இதற்கிடையில் தான் சென்னைக்கு வந்து சேர்ந்தது குறித்து அமித்ஷா தனது ட்விட்டரில் பதிவிட்டார். அந்தப் பதிவில் அவர், ``தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். மேலும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்து புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, தற்போது தமிழகத்தில் ரூ.67,378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். அரசு முறை பயணமாக சென்னைக்கு வந்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவரை முதல்வர் பழனிசாமியும் அதிமுக அமைச்சர்களும் பாஜக நிர்வாகிகளும் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். அங்கிருந்து லீலா பேலஸுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, அரசு விழாவில் பங்கேற்க கலைவாணர் அரங்கிற்கு புறப்பட்டார். அங்கு ஒபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் அமித்ஷாவை வரவேற்றனர். பின்னர் அவருக்கு விநாயகர் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

முதல்வர் பழனிசாமி தலைமையில், கலைவாணர் அரங்கில் நடைபெறும் அந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், வாரிய தலைவர்கள், அதிமுக- பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ரூ.67,378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார். கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர் தேக்கத்தையும், கரூர் தஞ்சை புகலூரில் ரூ.400 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டத்தையும், ரூ.61,843 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2ம் கட்ட பணிகளுக்கும், கோவை- அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத்திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

மேலும், அமுல்லைவாயலில் ரூ.1,400 கோடியில் lube plant அமைக்கும் திட்டத்திற்கும், காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்கு தளத்திற்கும், வல்லூரில் ரூ.900 கோடி இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலிய முனையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

இதன்பிறகு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ``நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் தமிழகம் வந்துள்ளதால் அரசியல் பேசுகிறேன். தமிழகத்தில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஊழல், குடும்ப அரசியல், சாதி அரசியல் நடைபெறுகிறது. வரும் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் குடும்ப ஆட்சி அகற்றப்படும். 2ஜி ஊழலில் தொடர்புடைய திமுக ஊழலைப் பற்றி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் குடும்பத்தின் மீதான் ஊழல் புகார்களை பார்த்துவிட்டு பிறகு ஊழல் புகார்களை சொல்லுங்கள். 

திமுக தலைவர்கள் அடிக்கடி மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தீங்கு செய்வதாகக் கூறுவது கூறுகிறார்கள். 10 ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக தமிழகத்துக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று பட்டியல் தர முடியுமா? மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியைவிட இரு மடங்கு நிதி தமிழகத்துக்கு பிரதமர் மோடி ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது2022ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படும். இதிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. 2024ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களுக்கும் கழிப்பறை வசதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.95,000 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. நீலப்புரட்சியிலும் தமிழகம் இந்தியாவின் முன்னொடி மாநிலமாக உள்ளது தமிழகத்தில் வேலூர், கரூர் மாவட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. புதிய வேளாண் சட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளித்ததன் மூலம் விவசாயிகள் மேலும் முன்னேறுவார்கள்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகர்களின் பங்கு மிகப்பெரியது. சிறப்பான நிர்வாகத்தில் இந்த ஆண்டு தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் தமிழகம் சிறப்பாக கையாண்டது.

இந்திய நாகரீகங்களில் பழமையானது தமிழக நாகரிகம். உலகில் தொன்மையான மொழி தமிழ். அந்த தொன்மையான மொழியில் என்னால் பேச முடியாது. ஏனென்றால் எனக்கு தமிழ் தெரியாது. அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது"

என்று கூறினார்.