மதுபானம் குடிக்க முடியாத விரக்தியில், மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவொற்றியூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான வீரபத்திரன், கொருக்குப்பேட்டையில் உள்ள வெல்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு நாள்தோறும் குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால், இவர் குடிக்கு அடிமையாகி இருந்தது அனைவருக்கும் தெரிந்திருந்தது.

இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அனைத்து விதமான கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதன் காரணமாக, குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரபத்திரன், குடிக்க வழியில்லாமல் கடும் அவதியடைந்து வந்துள்ளார். 

டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், கடந்த சில நாட்களாக மது குடிக்க முடியாமல், கடும் விரக்தி மற்றும் மன உளைச்சலில் காணப்பட்ட வீரபத்திரன், மாட்டுமந்தை மேம்பாலத்திலத்திற்கு சென்றுள்ளார்.

Tasmac lockdown depressed man commits suicide

அங்குப் பாலத்தின் தடுப்புச் சுவர் மீது ஏறி நின்று கொண்டிருந்த வீரபத்திரன், திடீரென்று தான் வைத்திருந்த பிளேடால், தன் கழுத்தை அறுத்துக்கொண்டு மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனையடுத்து, அந்த வழியாகச் சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வீரபத்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பலியான வீரபத்திரனுக்கு உஷா என்ற மனைவியும், சச்சின் என்ற மகனும், சவுமியா என்ற மகளும் உள்ளதாகத் தெரிவித்தனர்.

இதனிடையே, மது பானம் குடிக்க முடியாத விரக்தியில், சென்னையில் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.