1989ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11 ம் தேதி, உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மனிதர்களின் பாரம் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது, பூமிப் பந்து என்றுதான் இன்றைய மக்கள் தொகையை குறிப்பிட வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் பல்கிப் பெருகிக்கொண்டிருக்கிறது மக்கள் தொகை. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துவதற்காகவே, மக்களிடையே மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வையும், குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். அதற்கான முன்னெடுப்புதான், இந்த தினம்.

ஒவ்வொரு ஆண்டிலும் தனித்துவமான கருப்பொருளின் அடிப்படையில் மக்கள் தொகை தினத்தில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. அப்படி 2020 க்கு, உடல்நலம் - பொருளாதாரம் - சமூக நலன் என்ற கருவின் அடிப்படையில் செயல்படவிருக்கிறது. இந்தக் கருத்தாக்கத்தை வலியுறுத்துவது, ஐ.நா. சபை.

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகையினால், மக்களின் அடிப்படை வசதிகளை உறுதிசெய்யவதற்குக்கூட பல நாடுகள் திண்டாடி வருகின்றன. அந்தத் திண்டாட்டத்தை தவிர்க்கவாவது, மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் தொகை ஒப்பீட்டில், 1960ம் ஆண்டு மற்றும் 2016 -ஐ கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தோமேயானால்,  அன்றைக்கு உலக மக்கள் தொகை 300 கோடி. அதுவே, 2016ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 743 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் மக்கள் தொகை வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 1.31 சதவீதம் அதிகரித்து வருகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஆசியாவில் 237.771 மில்லியனும் ஆப்ரிக்காவில் 92.293 மில்லியனும் லத்தீன் அமெரிக்காவில் 38.052 மில்லியனும் வட அமெரிக்காவில் 16.241 மில்லியனும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

நடப்பு 2016ம் ஆண்டில் ஜூலை 10ம் தேதி நிலவரப்படி சீனாவின் மக்கள் தொகை 137 கோடியே 94 லட்சத்து 50 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 127 கோடியே 55 லட்சத்து 10 ஆயிரம். அமெரிக்காவில் 32 கோடியே 66 லட்சத்து 98 ஆயிரம்.

இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, வங்காள தேசம் ஆகியவை மக்கள் தொகை பெருக்கத்தினால் நீடித்த பிரச்சனைகளை எதிர்கொள்வதாக ஐநா தன்னுடைய ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது.

உணவு, நீர், சுற்றுசூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்னைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், இடப் பற்றாக்குறை தொடர்பான பிரச்னைகள் மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக ஏற்படுகின்றன. இவை அதிகரிக்கும் போது பொருளாதார நெருக்கடியும் உருவாகிறது

இந்த ஆண்டுக்கான கருத்தாக்கத்தின் அடிப்படையில், அடுத்த வருடம் முழுக்க மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புஉணர்வுகள் மேற்கொள்ளப்படும். 

தற்போது கொரோனா பரவுதல் காரணமாக உலகமே தனித்திருக்கிறது என்பதால், ஐ.நா, ``மனித உரிமைகளை, வீட்டுக்குள் பூட்டிவைத்து, தனித்திருக்க வைக்க முடியாது. இந்த கொரோனா காலத்திலும்கூட, சரியான வசதிகள் கிடைக்காத நபர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை எங்களால் பார்க்க முடிகிறது. ஆகவே அவர்களுக்கு நாங்கள் இந்த வருடம் உதவி செய்ய இருக்கிறோம். அவர்களின் உரிமையை அவர்களுக்கு பெற்றுதந்து, கொரோனாவின் தீவிரத்திலிருந்து அவர்களை காக்க நாங்கள் முற்படுகிறோம்.

கொரோனா என்றில்லை, இந்த பொதுமுடக்கமேவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறைகளை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அவற்றையும் நாங்கள் தடுக்க விரும்புகிறோம். 4 மில்லியனுக்கு மேற்பட்ட பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 12 மில்லியன் பெண்கள் கட்டாய திருமணத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தடுக்கும் பணியில், நாங்கள் இந்த வருடம் அதிகம் ஈடுபடுவோம்" எனக்கூறியிருக்கிறது.

- பெ.மதலை ஆரோன்.