சென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் சற்று தணிந்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது. இதனால், கடந்த வாரம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்தைத் தாண்டி உச்சம் பெற்றது.

அத்துடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருவார காலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு முதல் தற்போது வரை சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா ரைவஸ் தொற்றுக்கு 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர், தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

அதேபோல், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேரும் கொரோனாவுக்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தனர். 

சென்னை கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் இன்று மட்டும் 24 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதே போல், சென்னையில் அதிக பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

அதன்படி, தண்டையார்பேட்டையில் 5,717 பேரும், தேனாம்பேட்டையில் 5,534 பேரும், அண்ணா நகரில் 5260 பேரும், கோடம்பாக்கத்தில் 5216 பேரும், திரு.வி.க. நகரில் 3981 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை காவல் துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னை காவல் துறையில் இதுவரை 1,005 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 410 பேர் இதுவரை குணமடைந்து பணிக்குத் திரும்பி உள்ளனர்.

அத்துடன் குவைத், சிங்கப்பூர், பக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 135 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கொரோனா முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு மீண்டும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், சென்னையில் இருந்து 37 பயணிகளுடன் போலி இ பாஸ் மூலம் பீகார் செல்ல முயன்ற பேருந்து, வேலூர் அரப்பாக்கம் பகுதி சோதனை சாவடியில் காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் சென்னைக்கே திரும்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், “கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலையில், சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி இல்லை” என்று பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம் நாள்தோறும், கையுறைகளை வாரந்தோறும் புதிதாக அளிக்கப்படுவதாக” குறிப்பிட்டார்.

மேலும், “கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலையில் இ பாஸ், முறையாகப் பெறுவது அவசியம்” என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், “கைகளால் எழுதித் தரும் இ பாசோ, தனியாரிடம் பெறும் இ பாசோ செல்லாது” என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார். மேலும், QR Code இன்றி போலி இ பாஸ் தருபவர்கள் தொடர்பாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

இதனிடையே, கொரோனா ஊரடங்கு மீறல் காரணமாக, தமிழகத்தில் இதுவரை ரூ.15.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,34,306 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது வரை 5,45,763 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 6,73,741 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.