பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது. வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய இந்தக் கதையில் நடிப்பதற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார். இதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு சார்பட்டா பரம்பரை எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நேற்று வெளியிட்டது படக்குழு. இதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் தவிர்த்து திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து பதிவு செய்தனர். 

கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா உள்ளிட்ட பலர் ஆர்யாவுடன் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குனராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குனராக அன்பறிவு ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

சார்பட்டா பரம்பரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித் கூறியிருப்பதாவது: இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. இது நம்ப ஆட்டம். எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா என்று பா.இரஞ்சித் பதிவு செய்திருந்தார். 

இந்நிலையில் படத்தின் பிரத்தியேக புகைப்படங்களை பகிர்ந்தார் நடிகர் ஆர்யா. ஆர்யாவுடன் பசுபதி நிற்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் ஆர்யவின் திருமண காட்சியின் போது எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பரிசளிக்கிறார் கலையரசன். இந்த புகைப்படமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து அனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் எனிமி திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் அரண்மனை 3 படப்பிடிப்புக்கு பின்னர் இதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்யா நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் டெடி. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார்.