தேசிய அளவில் சிறப்பாகச் செயல்படும் காவல் நிலையங்களை அங்கீகரிக்க, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஒவ்வோர் ஆண்டும் பல குழுக்கள் அமைக்கப்படுகிறது. அந்தக் குழுக்கள் இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்குச் சென்று காவல் நிலையத்தின் பராமரிப்பு, சுற்றுப்புறச் சூழல், மனுதாரர்களிடம் காவலர்கள் நடந்துகொள்ளும் அணுமுறை, வழக்கு விசாரணைகளில் தண்டனை பெற்றுத் தரும் விவரம், நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த விவரம், வழக்கு விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்வது ஆகியவற்றை ஆய்வுசெய்கின்றன. மேலும், அந்தக் காவல் நிலையங்களைத் தொடர்ந்து கண்காணித்து, சிறந்த காவல் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கின்றன.

அதன்படி 2020 ஆண்டுக்காக இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்ததில், மணிப்பூர் காவல் நிலையம் தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை, தேசிய அளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருகிறது. இதனால் சேலம் காவல்துறையினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாட்டிலேயே சிறந்த காவல்நிலையங்களுக்கான விருதுப் பட்டியலில், சேலம் மாநகரத்தில் அமைந்துள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையம் இரண்டாம் இடம்பிடித்திருப்பதன் மூலம் தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களைத் தோ்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த விருது, குற்றங்களைக் கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம், ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடுதல், சமுதாயப் பணிகளில் ஆா்வம் காட்டுதல், குற்றப்பதிவேடுகளை கணினி மூலம் பராமரித்தல், புகாா் அளிக்க வரும் பொதுமக்களை வரவேற்கும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.

இந்த அடிப்படை உரிமைகளைக் கொண்டு, நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக அறிவிக்கப்பட்ட 10 காவல் நிலையங்களின் விவரம்:

1. மணிப்பூர்  - தௌபல் - நோங்போக்செக்மை காவல்நிலையம்
2. தமிழ்நாடு - சேலம் மாநகர் - சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையம்
3. அருணாசலம் - சாங்லங் - கர்சங் காவல்நிலையம்
4. சட்டீஸ்கர் - சூரஜ்புர் - ஜில்மிலி காவல்நிலையம்
5. கோவா - தெற்கு கோவா - செங்குயெம் காவல்நிலையம்
6. அந்தமான் - நிகோவார் தீவுகள் - வடக்கு மற்றும் மத்திய அந்தமான் - காலிகட் காவல்நிலையம்
7. சிக்கிம் - கிழக்கு மாவட்டம்  - பாக்யோங் காவல்நிலையம்
8. உத்தரப்பிரதேசம் - மொராதாபாத் - காந்த் காவல்நிலையம்
9. தாத்ரா மற்றும் நாகர் ஹேவேலி - தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி - கான்வெல்
10. தெலங்கானா  - கரீம்நகர் - ஜம்மிகுண்டா நகரம் காவல்நிலையம்.
விரைவில் இதற்கான விருதுகள், அந்தந்த காவல் நிலையங்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டில் நாட்டின் 10 சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில், கோயம்புத்தூா் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையம் இடம் பிடித்தது. அதேபோல கடந்த 2018-ஆம் ஆண்டு தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையம் 8-ஆவது சிறந்த காவல் நிலையமாக தோ்வு செய்யப்பட்டது. 2019-ஆம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களில், தமிழ்நாட்டின் தேனி அனைத்து மகளிா் காவல் நிலையம் 4-ஆவது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் தொடா்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழக காவல்துறையைச் சோ்ந்த காவல் நிலையங்கள், சிறந்த காவல் நிலையங்களில் பட்டியலில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு முறை தேனி மாவட்ட காவல்துறைக்கு கீழ் இருக்கும் காவல் நிலையம், சிறந்த காவல் நிலைய பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்த சிறந்த காவல் நிலையத்துக்கான தீர்வு, 750க்கும் மேற்பட்ட காவல்நிலையங்கள் இருக்கும் மாநிலங்களில் இருந்து தலா மூன்று காவல்நிலையங்களும், இதர மாநிலங்கள் மற்றும் தில்லியிலிருந்து தலா 2 காவல்நிலையங்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து தலா 1 காவல்நிலையமும் இந்த விருதுப் பட்டியலுக்கு தேர்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதிலிருந்து தேர்வுக் குழுவினரால் 75 காவல்நிலையங்கள் அடுத்த கட்டத்தக்கு தகுதிபெறும்.

இறுதித் தேர்வில் தொழில்நுட்பத்தைக் கையாண்டு, குற்றங்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட 19 கட்டமைப்புகள் கவனத்தில் கொண்டு, சிறந்த 10 காவல்நிலையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இதனடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், காவல்நிலையத்தின் கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.