தளபதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சந்தோஷ் சிவன்.  தொடர்ந்து தமிழில் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த இருவர், உயிரே ,ராவணன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கும் சந்தோஷ் சிவன் இயக்குனராகவும் சில படங்களை இயக்கியுள்ளார். 

அசோகா, உருமி போன்ற  வரலாற்று திரைப்படங்களை இயக்கும் சந்தோஷ் சிவன் இயக்கிய “இனம்” திரைப்படம் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. இலங்கையில் இருக்கும் விடுதலைப்புலிகளை மையப்படுத்தியும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன்  அவர்களின் இறப்பையும்  மையக்கருவாக கொண்டு உருவானது “இனம்” திரைப்படம். 

“இனம்” திரைப்படத்தை தனது சொந்த தயாரிப்பில் தயாரித்து கதை திரைக்கதை இயற்றி இயக்கியுள்ளார் சந்தோஷ் சிவன். இயக்கனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிட கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் வெறும் இரண்டு நாட்களே ஓடிய நிலையில் தடை செய்யப்பட்டது.  தமிழ் மக்கள் மத்தியிலும் இந்திய அளவிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் படியான சர்ச்சைக்குரிய திரைப்படமாக  அமைந்ததாக சொல்லப்பட்டு  இனம் திரைப்படம் தடை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இத்திரைப்படம் வெளியாக  உள்ளது. 

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் விரைவில் இனம் திரைப்படம் OTT-ல் வெளியாகும் என அறிவித்துள்ளார். இனம் திரைப்படம் தடை செய்யப்பட்ட போதே மக்களின் அதிக கவனத்தை அது பெற்றிருந்தது. அதன்பிறகு இனம் திரைப்படத்தைப் பற்றிய பேச்சுகள் மறைந்த நிலையில் இப்போது மீண்டும் இத்திரைப்படம் வெளியாக உள்ளதால் மக்கள் மத்தியில் மீண்டும் இது ஒரு பேசுபொருளாக மாறி இருக்கிறது. இனம் திரைப்படத்தின்  OTT வெளியீடு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.